தேர்தலில் சீட் கேட்பதற்கே காங்கிரஸ் கட்சியை நடத்துகின்றனர்: அமைச்சர் ராஜகண்ணப்பன்!

காங்கிரஸ் கட்சி உழைக்க வேண்டும் என்று நினைக்காமல் தேர்தலில் மட்டும் சீட் கேட்குறாங்க. தேர்தலில் சீட் கேட்பதற்கே அந்த கட்சியை அவர்கள் நடத்துகின்றனர் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி என்பது திமுக கூட்டணியில் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிறங்கும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணியிலும் காங்கிரஸ்-திமுக கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. நாளைய தினம் காங்கிரஸ்-திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதி, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது புதுச்சேரியில் மாநில திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பேசியபோது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த மலை இல்லை எந்த மலை வந்தாலும் முதலவர் முக ஸ்டாலினை ஒன்றும் செய்ய முடியாது. இந்தியா பன்முக தன்மை கொண்ட மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்யக்கூடாது. எங்களுக்கு மத்திய அரசை கண்டு எந்த பயமும் இல்லை. அமலாக்கத்துறை, சிபிஐ என எதை பார்த்தும் நாங்கள் பயப்படமாட்டோம். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் தாமரை மலராது.

புதுச்சேரியில் திமுக வளர வேண்டும். திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நம்முடன் உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகவும் பழமையான கட்சியாக இருக்கிறது. தற்போது அந்த கட்சி பலத்தை இழந்து வருகிறது. காங்கிரஸை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. காங்கிரஸை பொறுத்த வரை சீட் பெறுவதற்காகத்தான் கட்சி நடத்துகிறார்கள். அதனால் என்ன பயன்? கடினமாக உழைக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இருப்பினும் இந்த 2 விஷயங்களை காங்கிரஸ் கட்சி செய்வதே இல்லை. ஆனால் தேர்தல் நெருங்கும்போது காங்கிரஸ் கட்சி வந்துவிடும். இது மக்கள் மத்தியில் வேலை செய்யாது. இது மக்கள் மத்தியில் வேலை செய்யாது. இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ராஜகண்ணப்பணின் இந்த பேச்சு என்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டு தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த கூட்டணியில் உள்ள ஆம்ஆத்மி கட்சியும் பஞ்சாப்பில் தனித்து களம் காண உள்ளதாக கூறியுள்ளது. இத்தகைய சூழலில் தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.