விமர்சனங்களுக்கு மத்தியில் பிலிம்பேர் விருதுகளை அள்ளிய அனிமல்!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் படம் அனிமல். அண்மையில் வெளியான இந்தப் படம் பெரும்பாலானோர் மத்தியில் மோசமான விமர்சனத்தையே பெற்றது. இப்படிப்பட்ட சூழலில் அனிமல் படமானது மொத்தம் ஆறு பிலிம்பேர் விருதுகளை வென்றிருக்கிறது.

இந்திய திரைத்துறையில் மதிப்புமிக்க விருதாக கருதப்படுவது பிலிம்பேர் விருது. தேசிய விருதுக்கு அடுத்ததாக பலரும் பிலிம்பேர் விருது பெறுவதை கௌரவமாக கருதுகிறார்கள். இதுவரை 68 பிலிம்பேர் விருதுகள் விழா நடைபெற்றிருக்கின்றது. 69ஆவது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா குஜராத்தில் ஜனவரி 28ஆம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று இந்த விழா பிரமாண்டமாக தொடங்கியது. விருது பெறுவதற்காக ஏராளமான படங்கள் மற்றும் கலைஞர்களை நடுவர் குழு பரிந்துரைத்தனர். அதன்படி சிறந்த நடிகருக்கான பிரிவில் ஜவான் மற்றும் டங்கி ஆகிய படங்களில் நடித்ததற்காக ஷாருக்கான், அனிமல் படத்தில் நடித்ததற்காக ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் போட்டியில் இருந்தனர். அதேபோல் சிறந்த நடிகைக்கான பிரிவில் ஆலியா பட்டும் போட்டியில் இருந்தார்.

அதேபோல் சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் 12 பெயில், அனிமல், ஜவான், OMG 2, பதான் உள்ளிட்ட படங்கள் போட்டியில் இருந்தன. மேலும் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் அட்லீ போட்டியில் இருந்தார். சிறந்த கதைக்கான பிறிவில் ஜவான் திரைப்படம் பரிந்துரைக்கப்பட; சிறந்த இசை ஆல்பத்துக்கான பிரிவில் அனிருத், சிறந்த தயாரிப்பு டிசைன் பிரிவில் முத்துராஜ், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பிரிவில் ஜவான் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் போட்டியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் அனிமல் படத்துக்கு மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்திருக்கின்றனர். அதன்படி சிறந்த நடிகருக்கான விருதை ரன்பீர் கபூர் பெற்றார். மேலும் அனிமல் படத்துக்கு, சிறந்த ஆல்பம், சிறந்த பின்னணி பாடகர் (புபேந்தர் பப்பால்), சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட் டிசைன், Best Upcoming Music Talent (ஷ்ரேயாஸ் பாரானிக்) ஆகிய விருதுகளை அனிமல் படம் பெற்றிருக்கிறது.