ஊழல் இல்லாத ஆட்சியாகத்தான் மத்திய அரசு நீடித்து வருகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:-
இந்தியாவில் வாழும் மக்களின் உணர்வுதான் ராமர் கோயில். அது சாதி, மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. ராமர் கோயில் கட்டப்பட்டது எல்லோர் மனதையும் கவர்ந்த, திருப்திப்படுத்திய விஷயம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு முறைப்படி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதனை கட்டியவர்களுக்கு அது பெருமைக்குரிய ஒரு விஷயம். ராமர் கோயில் கட்டப்பட்டதன் தாக்கத்தை மக்களவைத் தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும்.
சுமார் 600 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காமல் நீடித்து வருகிறது. கேஸ் சிலிண்டர் விலை கூட குறைக்கப்பட்டு வருவதை பார்க்கிறோம். ஊழல் இல்லாத ஆட்சியாகத்தான் மத்திய அரசு நீடித்து வருகிறது. தொடர்ந்து பல மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்று வருகிறது. அந்த கட்சிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் எண்ணமாக உள்ளது. தமிழகம் எவ்வாறு தீர்மானிக்கப் போகிறது என்பது வரும் மக்களவைத் தேர்தலில் தான் தெரியும்.
துரோகமும் ஏமாற்று வேலையும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்த ஒரே அரசியல். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு உள் ஒதுக்கீடு என்ற பெயரில் வன்னியர் சமூக மக்களை ஏமாற்றினார். தற்போது சிறுபான்மை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார், ஆனால் அவர்கள் ஏமாற மாட்டார்கள். இரட்டை இலை காட்டி தமிழக மக்களை எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.