இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப மறுப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயல் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளதாவது:-
இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் மூலம் நிரப்பப்படாத ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களைப் பொதுப்பிரிவில் நிரப்ப பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முடிவு வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீட்டு முறைமையையே மெல்ல மெல்ல சிதைத்தழிக்க முயலும் இந்திய ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சி வன்மையான கண்டனத்துக்குரியது.
பன்னெடுங்காலமாக சாதிய தீண்டாமை காரணமாக கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்கான சமூக நீதியைக் காக்கும் பொருட்டு, அரசியல் அமைப்பினை வகுத்தளித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு முறைமையை, கடந்த 10 ஆண்டுக் கால மோடி தலைமையிலான பாஜக அரசு வேகமாக சிதைத்து வருகிறது. ஏற்கனவே ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் போதுமான அளவு சேரவில்லை என்று கூறி அவற்றை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்குகின்ற முறைகேடுகள் மறைமுகமாக அரங்கேறி வரும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் தற்போதைய அறிவிப்பு இட ஒதுக்கீட்டு முறைமையில் விழுந்துள்ள மற்றுமொரு பேரிடியாகும்.
முற்பட்ட வகுப்பினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற பெயரில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் உன்னத நோக்கத்தையே பாஜக அரசு அழித்தொழித்துள்ளது. மேலும், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட துறைகளுக்கான பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும், பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீடு விதிகளை இந்திய ஒன்றிய அரசு முறையாகப் பின்பற்றுவதில்லை. ஒன்றியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லும் பாஜக அரசு, முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மறுக்காமல் வழங்குவதற்கு பெயர்தான் சமூகநீதி என்றால், அது எந்த சமூகத்திற்கான நீதி? இந்தியா முழுவதுமே 5 விழுக்காடு கூட இல்லாத முற்பட்ட வகுப்பினரில், அதிலும் பொருளாதார அடிப்படையில் எனும்போது மேலும் குறைந்து 3 விழுக்காடு இல்லாத மக்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுவது சமூகநீதி அடிப்படையிலா? அல்லது மனுதர்ம அடிப்படையிலா? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு? இவையெல்லாம் பாஜக அரசு வர்ணாசிரம சூழ்ச்சிகள் மூலம் இட ஒதுக்கீடு முறையை இட பதுக்கீடாக மாற்றி வருவதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
எனவே, உயர் கல்வி நிறுவனப் பணியிடங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் இந்திய ஒன்றிய அரசின் செயல் அரசியலமைப்புச்சட்டத்திற்கு மட்டுமின்றி அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானது. இந்த நாட்டில் வாழும் 95 விழுக்காடு குடிமக்களுக்கு இழைக்கப்படும் இம்மாபெரும் சமூக அநீதியை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாறாக ஆட்சி, அதிகாரத்தின் துணைகொண்டு ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக வர்ணாசிரம அடிப்படையிலான இத்தகைய அநீதியானது தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுமாயின் அவை மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்திடும் எனவும் பாசிச பாஜக அரசினை எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.