“பாஜக யாருடைய ஆதரவை பெற்றாலும், யார் தோளில் சவாரி செய்து வந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவது என்பது நடக்கவே நடக்காத விஷயம்” என்று சேகர்பாபு கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி சிறு பிசிறு கூட இல்லாமல் பலமாக இருக்கிறது. அதிமுகவுக்கு பலமான கூட்டணி இன்னும் அமையாத போதிலும், சிறிய கட்சிகளின் துணை அதற்கு இருக்கிறது. அப்படி பார்க்கும் போது, தமிழகத்தில் பாஜக தான் தனித்து விடப்பட்டிருக்கிறது. இதனால் பல கட்சிகளுடன் பாஜக கூட்டணிக்காக பேசி வருகிறது.
இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “கமல் மட்டுமல்ல.. ரஜினிகாந்த், விஜய் ஆகியோரிடமும் நாங்கள் ஆதரவு கேட்போம். நடிகர்களிடம் ஆதரவு கேட்பது தான் எங்கள் வேலை” எனக் கூறினார்.
இந்நிலையில், வானதியின் இந்தக் கருத்து குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “நீங்கள் (பாஜக) யாருடைய தோளில் சவாரி செய்து வந்தாலும், உங்கள் தோள் மீது யாரை தூக்கி வந்தாலும், திடத் தோள்களை கொண்ட எங்கள் தளபதியார் (மு.க. ஸ்டாலின்) இருக்கும் வரையில், தமிழகம் திராவிட மண்ணாக இருக்கும் வரையில், திராவிட மாடல் ஆட்சியில் பலனடைந்த மக்கள் இருக்கும் வரையில், நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை இந்த மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு பரிசாக வழங்குவார்கள். பாஜக யாரை கூப்பிட்டு வந்தாலும் பிரயோஜனமே இல்லை” என சேகர்பாபு கூறினார்.