நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் கூறுகையில், “நான் மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவரிடம் பேசியிருக்கிறேன். அரசு சார்பாக அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இடைநீக்கம் ரத்து சபாநாயகர், மக்களவைத் தலைவரின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட சிறப்புகுழுக்களைத் தொடர்பு கொண்டு இடைநீக்கக்கத்தை ரத்து செய்து அவர்கள் (எம்.பி.,க்கள்) அவைக்கு வர வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இருவரும் அதற்கு சம்மத்தித்துள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் நாளை கூட்டத்தொடரில் கலந்து கொள்வார்களா என்று கேட்ட போது, “ஆம்” என்றார்.
மேலும் அமைச்சர் கூறுகையில், “ஆளும் பாஜக உள்ளிட்ட 30 கட்சிகளைச் சேர்ந்த 45 தலைவர்கள் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமூகமான முறையில் கூட்டம் நடந்தது. இது ஒரு குறுகிய கூட்டத் தொடர். மேலும் 17-வது மக்களவையின் கடைசிக் கூட்டத்தொடர். யாரும் பதாகைகளுடன் வரவேண்டாம் என்று எம்.பி.,க்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றார்.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் கீழே குதித்து தங்கள் கைகளில் இருந்த குப்பிகள் மூலம் மஞ்சள் நிற புகைகளைப் பரப்பினர். இந்தச் சம்பவம் மக்களவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியது.
நாடாளுமன்ற மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 14-ம் தேதி முதல் தொடர் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வந்தன. மக்களவையில் பதாகைகளை ஏந்திய சபாநாயகரை முற்றுகையிட்டதால் அன்று காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.பிக்கள் அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல், மாநிலங்களவையில் ஒரு எம்.பி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடந்த 18-ம் தேதி அன்று நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையைச் சேர்ந்த எம்.பிக்கள் 33 பேர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் 45 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, 19-ம் தேதி அன்று நாடாளுமன்றம் கூடியதும் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 49 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். டிச.21ம் தேதியும் மக்களவையில் மூன்று எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன்மூலம், ஒரே கூட்டத்தொடரில் மொத்தமாக 146 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.