காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு வேட்பாளர்கள் தேர்வு குறித்து மறைமுகமாக விமர்சித்த மூத்த தலைவர் மணீஷ் திவாரி, இன்றைய நிலையில் மாநிலங்களவை தேவையா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ராஜீவ் சுக்லா, அஜய் மக்கான், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி, ரஞ்சீத் ரஞ்சன், விவேக் தங்கா உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர். ஆனால், ஜி-23 தலைவர்களான குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டன.
இதற்கிடையே தனக்கு எம்பி பதவிக்கு தகுதியில்லையா? என்று கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மா, கட்சி தலைமைக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இவரை போன்றே கட்சியின் மற்ற தலைவர்கள் சிலர், கட்சி தலைமை மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான மணீஷ் திவாரி கூறுகையில், “மாநிலங்களவை என்பது வாகனம் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. அரசியலமைப்பின்படி கடந்த சில ஆண்டுகளாக மாநிலங்களவை அதன் பொறுப்பை நிறைவேற்றவில்லை. தற்போதைய சூழ்நிலையில் மாநிலங்களவை என்பது ஒன்று தேவையா? என்பதை ஆராய வேண்டும். என்னுடைய தனிப்பட்ட கருத்துப்படி, மாநிலங்களவை அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதை நிறுத்திவிட்டது. நாட்டிற்கு இப்போது மாநிலங்களவை தேவையா? இல்லையா? என்பதை ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம்” என்று, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மறைமுகமாக சாடியுள்ளார்.