பிரதமர் மோடியின் தமிழக வருகையால் ஸ்டாலின் மிரண்டு விட்டார்: எல்.முருகன்

பிரதமர் மோடியின் தமிழக வருகையால் ஸ்டாலின் மிரண்டு போயுள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் உங்களுக்கு ஏன் பயம் ஏற்படுகிறது எனவும் முருகன் வினவியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பதாவது:-

இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமயத்தில் மத்திய ஆளும் பாஜக அரசின் மீதும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டியது எனது கடமை.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வரத் தொடங்கியுள்ளார் என ஸ்டாலின் ஆதங்கப்படுகிறார். பிரதமரின் வருகையால் தமிழகத்தில் பேரெழுச்சி ஏற்பட்டுள்ளதை பார்த்து மிரண்டு போயுள்ளார் மு.க.ஸ்டாலின். ஆம் தமிழகத்தின் மீது பேரன்பு கொண்ட நமது பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் உங்களுக்கு ஏன் பயம் ஏற்படுகிறது. தமிழக மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் வந்து விட்டதால் திமுகவினர் ஏற்கெனவே கோபமும், வெறுப்பின் உச்சத்திலும் இருப்பது தெரிகிறது. இப்போது தோல்வி பயமும் தொற்றிக் கொண்டு விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மக்களை சந்திப்பது என்று தெரியாமல் திமுகவினர் நடுங்குகின்றனர். மக்களுக்காக பணியாற்றும் மக்கள் தலைவரின் பின்னால் மக்கள் திரண்டு எழுவது இயல்பு. பிரதமர் மோடியின் வருகை அதை தான் உணர்த்துகிறது. குடும்ப அரசியல் செய்து தமிழகத்தை குடும்ப சொத்தாக மாற்ற முயலுபவர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி கொடுத்கத்தான் செய்வார்கள்.

திமுக அரசை பற்றி பிரதமர் அவதூறு செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். தமிழகம் எக்கேடு கெட்டாலும் பராவாயில்லை, தங்கள் அரசியல் நடந்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என முதலமைச்சர் திரு. ஸ்டாலின் மட்டுமல்லாமல் திமுகவின் முன்னணி தலைவர்கள் தொடர்ந்து பொய் பிரசாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி பொறுப்பேற்ற ஒன்பது ஆண்டுகளில் மானியங்கள் மத்திய நிதி உதவி திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகம் ரூபாய் 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் அளித்த வரியை விட இரண்டு மடங்கு அதிகம்.

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் நலனுக்காக செய்து வரும் நலத்திட்டங்கள் எண்ணில் அடங்காதவை. மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழகம் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுள்ளது. வெள்ள பாதிப்பின் போது தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூபாய் 868 கோடியை மானியமாக வழங்கியது. இந்த நிதியாண்டில் மத்திய அரசு, தமிழகத்திற்கு, ரயில்வே மேம்பாட்டுக்காக, 6,000 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்பது புதிய ரயில் பாதை திட்டங்கள் அறிவித்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உட்பட ஐந்து ரயில் நிலையங்களை 1800 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. 90 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தில், மேம்பாடு செய்ய நிதி ஒதுக்கி பணிகள் நடைபெறுகின்றன. பாரம்பரியமிக்க மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி ஆகிய மூன்று ரயில் நிலையங்கள், மேம்படுத்த, தலா 10கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய், ரயில் பாதை மேம்பாடு செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி என பல நகரங்களிலும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி கடந்தமுறை திருச்சி வந்தபோது ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். சேலம்- மேட்டூர் இரட்டை ரயில்பாதை, மதுரை-தூத்துக்குடி இரட்டை ரயில்பாதை, திருச்சி-மானாமதுரை-விருதுநகர் மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை, விருதுநகர்-தென்காசி மற்றும் செங்கோட்டை -திருச்செந்தூர் மின் மயமாக்கப்பட்ட ரயில்பாதைகள் முக்கியமானவை. அதோடு திருச்சி-கல்லகம் தேசிய ‍நெடுஞ்சாலை, காரைக்குடி – ராமநாதபுரம் இருவழிச்சாலை, சேலம் – வாணியம்பாடி நான்கு வழிச்சாலை‍ திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.1100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் நிறுத்துமிடம், மற்றும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுமட்டுமின்றி சாலை திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இப்போது தூத்துக்குடியிலும் 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களை தமிழகத்துக்கு தந்துள்ளார்.

‘பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் பிற்காலத்தில் திமுக மத்தியில் அங்கம் வகித்த கூட்டணி ஆட்சிக்காலத்திலும் கொண்டு வரவில்லை. பெருந்தலைவரின் கனவை தற்போது நிறைவேற்றுவது பிரதமர் மோடி அவர்கள் தான். சொந்த அரசியல் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை வஞ்சிப்பதாக திமுக செய்யும் விஷமப் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. சுயநல அரசியல் செய்யும் திமுகவிற்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

தமிழகத்தில் இருந்து திமுக முற்றாக அகற்றப்படும் என்ற பிரதமர் மோடியின் சூளூரையை நினைவுப்படுத்துகிறேன். பிரதமரின் அறைகூவலை தேர்தலில் செய்து காட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். ”இந்தியாவின் ஆட்சி மாற்றமே எனது பிறந்தநாள் பரிசு” என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பழிக்கப்போவதில்லை. தமிழகத்தில் 40 இடங்களிலும், நாடு முழுவதும் 400 இடங்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சி 3-வது முறையாக அமையும் என உறுதியிட்டு கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.