கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வு ரத்து!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தங்களது நிலங்களை கொடுத்துள்ளனர். நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த 1999ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 1999ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை புறக்கணிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாளர்கள் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர். இந்த எழுத்துத் தேர்வு நாளை (மார்ச் 3ஆம் தேதி) நடக்க உள்ளதாக, அணுமின் நிலையம் அறிவித்தது.

இந்நிலையில், உள்ளூர் மக்களை புறக்கணித்து, 1999ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் நாளை நடத்தப்படும் தேர்வை அணுமின் நிலைய நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என கூடங்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என அறிவித்தனர். கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நாளை நடக்க உள்ள எழுத்துத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை உள்ளூர் மக்கள் தாங்கள் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து முற்றுகை போராட்டத்தை அறிவித்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.