கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனென்றால் அவர்தான் இலவச மின்சாரத்தைக் கொண்டு வந்தவர் என்று திமுக எம்பி கனிமொழி பேசினார்.
தஞ்சை மாவட்டத்தில் திமுக சார்பில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ நிகழ்ச்சியும் 2024 பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது:-
கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனென்றால் அவர்தான் இலவச மின்சாரத்தைக் கொண்டு வந்தவர். இலவச மின்சாரம் இல்லையென்றால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்திருக்க முடியாது என்றே விவசாயிகள் கூறுகிறார்கள். அந்தளவுக்கு விவசாயத்தையும் விவசாயிகளையும் காத்தவர் கருணாநிதி. இது மட்டுமா.. 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை ரத்து செய்தார். தனது வாழ்நாள் முழுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நடக்க பாடுபட்டவர் கருணாநிதி. அவரது ஆட்சியின் நீட்சியாக இருந்து ஆட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், நாட்டிலேயே முதல்முறையாக விவசாயத்திற்காகத் தனி பட்ஜெட்டையும் கொண்டுவந்தார். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நமது நாட்டில் விவசாயம் தான் மிகப் பெரிய தொழில். கொரோனா சமயத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்ட போது அனைத்து தொழில்களும் முடங்கின. கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில், விவசாயம் மட்டுமே தொடர்ந்து நடந்தது. அதை யாராலும் நிறுத்த முடியாது.
இங்கே ஆளுநர் ஒருவர் இருக்கிறார். போன வருடமும் சரி, இந்த வருடமும் சரி சட்டசபையில் என்ன செய்தார் என அனைவருக்கும் தெரிந்து இருக்கும். படிக்க முடியாது என்றால் வீட்டிலேயே இருந்து இருக்கலாமே.. அங்கே இருந்து கிளம்பி வந்து படிக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார். படிக்க மாட்டேன் எனச் சொல்ல எதற்கு இவ்வளவு கஷ்டப்படணும்னு தெரியவில்லை. அவருக்குத் தமிழ்நாட்டைப் பற்றியும் தெரியாது. தமிழக மக்கள் பற்றியும் தெரியாது. ஆனால் தொடர்ந்து தமிழக மக்களை புண்படுத்தும் வகையில் பேசிக் கொண்டு இருப்பார். ஏதோ ஆங்காங்கே திருக்குறளைச் சொன்னால் போதும் என நினைக்கிறார்கள். அவர் எந்த மொழியில் திருக்குறளைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. தமிழர் பழமையான மொழி என்று பிரதமரே சொல்வதாக அவர்களது கட்சியினரும் சொல்வார்கள்.. தமிழ் தொன்மையான மொழி என்று நீங்கள் சொல்லி எங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை. தொன்மை மட்டுமின்றி தொடர்ச்சியும் இருக்கும் மொழி தமிழ். சமஸ்கிருதத்திற்குத் தொன்மை இருந்தாலும் தொடர்ச்சி இல்லை. எத்தனை பேர் இன்று சமஸ்கிருதம் பேசுகிறார்கள்.
தமிழைப் புகழும் பாஜகவினர், தமிழ் மொழியை வளர்த்தெடுக்க ஒதுக்கும் தொகையை விட 22 மடங்கு அதிகமாகச் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்குகிறார்கள். உங்கள் பாராட்டு எல்லாம் தமிழ்த்தாய்க்குத் தேவையில்லை. தமிழை வளர்க்க நிதி மட்டும் கொடுங்கள் போதும். அதைச் செய்ய மாட்டார்கள். எந்தக் காரணத்திற்காகவும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கக்கூடாது என்று மத்திய பாஜக அரசு இருக்கிறது. ஒரே நாடு ஒரே வரி என்று வசூலிக்கிறார்கள் ஓகே.. ஆனால், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியைக் கூட முறையாகத் தர மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.