நடிகை கமாலினி முகர்ஜிக்கு 40வது பிறந்தநாள் இன்று!

‘’வேட்டையாடு விளையாடு” படத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாகத் தோன்றி ஒட்டுமொத்த 90’ஸ் கிட்ஸ்களின் செல்ல கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர், நடிகை கமாலினி முகர்ஜி. இன்று தனது 40ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 1984ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி பிறந்தவர், கமாலினி முகர்ஜி. இவரது தந்தை ஒரு கடல் தொழில் பொறியியலாளர் மற்றும் அவரது தாய் ஒரு நகை வடிவமைப்பாளர். கமாலினி முகர்ஜி தான், அவரது வீட்டில் பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர். தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடிப்பின்மீது கொண்டுள்ள ஆர்வத்தால் எண்ணற்ற மேடை நாடகங்களில் தோன்றி நடித்துள்ளார். குறிப்பாக, ஆண் வேடம் தெரித்து கம்பீரமாக நடித்தார். மேலும், கமாலினி முகர்ஜிக்கு நாடக நடிப்பு மீது ஒரு பக்கம் ஆர்வம் இருந்தாலும் மற்றொரு பக்கம் வாசிக்கவும், படம் வரையவும், எழுதவும் சிறுவயது முதலே பிடித்து இருந்தது. போதாக்குறைக்கு, பரதநாட்டியப் பயிற்சியை மேற்கொண்டு, ஒரு தரமான கிளாஸிக்கல் டான்ஸராகவும் இருந்தார். கொல்கத்தாவில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்ற கமாலினி முகர்ஜி, அதன்பின், மும்பையில் நாடக படிப்பைப் பயின்றார்.

நடிகை ரேவதி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக்காக எடுத்த படம் ‘பிர் மிலேங்கே’. இத்திரைப்படத்தில் ஷில்பா ஷெட்டி கதாநாயகியாக நடித்தாலும், இப்படத்தில் நடிகை கமாலிஜி முகர்ஜி, ஷில்பா ஷெட்டியின் தங்கையாக நடித்திருந்தார். அதேபோல், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஆனந்த் என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நடித்ததற்காக 2004ஆம் ஆண்டின் நந்தி விருதினையும் பெற்றார். அதன்பின், 2006ஆம் ஆண்டு, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வேட்டையாடு விளையாடு’ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்போது கமல்ஹாசனின் மனைவி கயல்விழியாக வாழ்ந்து இருப்பார். இப்படத்தில் கமல்ஹாசன் ராகவன் என்னும் கதாபாத்திரத்தில் தோன்றி, கயல்விழியிடம் புரோபோஸ் செய்யும் காட்சியும்; அதன்பின், இருவரும் ஜோடியாக பைக்கில் சொல்லும்போது ‘பார்த்த முதல் நாளே’என்னும் பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஒரு சில காட்சிகளே வந்தாலும் நடிகை கமாலினி முகர்ஜி போல், ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும், எனத் தோன்றும் அளவுக்கு, இப்படத்தில் அவரது காஸ்ட்யூம், செயல்பாடுகள் அவ்வளவு அழகாக இருக்கும்.

அதன்பின் கம்யம் என்னும் இவர் நடித்த தெலுங்கு படம், சிறிது ரீஷூட் செய்யப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்டு ‘காதல்னா சும்மா இல்லை’ என்னும் டைட்டிலுடன் வெளியானது. அதன்பின், அவரது தாய்மொழியான பெங்காலி, தெலுங்கு, மலையாளம் என கலந்துகட்டி நடித்துவந்த நடிகை கமாலினி முகர்ஜி, 10 ஆண்டுகள் இடைவெளிவிட்டு, ‘இறைவி’ என்னும் படத்தில் யாழினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் எஸ்.ஜே. சூர்யா, இவரை பார்த்து ‘கண்ணைக்காட்டி முறைச்சா ஒத்தவாட்டி சிரிச்சா போதும்’ என்னும் பாடல், சந்தோஷ் நாராயணன் இசையில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதன்மூலம் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கும் பரீட்சயமானார், கமாலினி. அதன்பின், மலையாள சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவான மோகன் லாலுடன் ’புலி முருகன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, மைனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம், மலையாளத்திரை உலக வரலாற்றில் முதல்முறையாக ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்த திரைப்படமாக மாறியது. பின்னர், இப்படம் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழில் குறைவான படங்களில் நடித்து இருந்தாலும்,நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த கமாலினி முகர்ஜி தனது நாற்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.