‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றிக்கு அதன் எளிமை தான் காரணம்: பா.ரஞ்சித்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்கு காரணம் அதன் இயல்பு தன்மையும், எளிமையும்தான். அந்த எளிமையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களின் ரசனையை ஒரு குறிப்பிட்ட ஸ்டிரியோ டைப்பில் அடைக்க முடியாது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஊர்வசி, தினேஷ், மாறன் நடித்துள்ள ‘ஜே.பேபி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது:-

ஒரு படத்தை கோபம் இல்லாமல் ஜாலியாக எடுக்க முடியும். பொறுமையாகவே எல்லோரிடமும் வேலை வாங்க முடியும் என்பதை எனக்கு உணர்த்திய படம் வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’. அவர் தான் எனக்கு அதை உணர்த்தினார். இந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி. ஜே.பேபி உறவுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம். மக்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த படம். எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தை மக்களிடையிலும் இப்படம் ஏற்படுத்தும்.

இன்றைக்கு இருக்கும் சூழலில் எந்தப் படம் ஓடும், ஓடாது என்ற முன்முடிவுக்கு வர முடியவில்லை. ஆக்‌ஷன், ரத்தம் தெறிக்கும் படங்கள் தான் ஓடும் என அப்படியான படங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கும் சூழலில் தான், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘ப்ளூ ஸ்டார்’ படங்கள் வெளியாகி மக்களிடையே கொண்டாடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன. ஆக, மக்களின் ரசனையை ஒருகுறிப்பிட்ட ஸ்டீரியோ டைப்பில் அடைக்க முடியாது. அந்த வகையில் ‘ஜே.பேபி’ மக்கள் விரும்பும் படமாக இருக்கும்.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்கு காரணம் அதன் இயல்பு தன்மையும், எளிமையும் தான். அந்த எளிமையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எந்த கதாபாத்திரத்தையும் தனித்து தெரியவிடாமல், இயல்பாக எடுத்திருப்பார்கள். முதல் பாதி விரைவில் முடிந்துவிட்டதாக தோன்றும். இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸில் ஒரு பாடலை வைத்து எல்லோரையும் கனெக்ட் செய்திருப்பார்கள். அப்படியான சிம்பிளான படமாக ‘ஜே.பேபி’ இருக்கும். என் அம்மா இப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்.

இப்படியான படங்களை ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என ஓடிடி தளங்களே ஒரு முன்முடிவுடன் இருக்கின்றன. படங்களை வாங்க யோசிக்கிறார்கள். மக்களுடைய ரசனை இப்படித்தான், இதை பார்க்கமாட்டார்கள் என முன்முடிவுடன் அணுகிறார்கள். அப்படியான பிரச்சினையை ஜே.பேபியும் எதிர்கொண்டு வருகிறது. ஆனால் அதை உடைத்து படம் முன்னேறும். இவ்வாறு அவர் கூறினார்.