கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்!

கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பெங்களூரில் உணவகம் ஒன்றில் குண்டு வெடித்திருந்த நிலையில், தற்போது போலீசார் உஷார்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பெங்களூர் குண்டனஹல்லி பகுதியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1ம் தேதியன்று மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர், உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. ஆரம்பத்தில் சிலிண்டர் வெடித்ததாக சொல்லப்பட்டாலும், வெடித்தது வெடி குண்டு என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஒயிட் ஃபீல்ட் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்புப் படை அதிகாரிகள் ஆகியோரும் தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்ற‌னர். தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணையையும், ரெய்டையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் என பல்வேறு தரப்பினருக்கும் மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.