மோடி தமிழ்நாட்டில் குடியேறினால் கூட பாஜக வெற்றிபெறாது: கனிமொழி!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்தாலும், தமிழ்நாட்டில் குடியேறினாலும் பாஜக வெற்றிபெறாது என கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார்.

ஈரோட்டில் நடைபெற்ற திமுக பொதுகூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மதவாதத்தை புகுத்தி அரசியல் செய்கின்றனர். மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை நடந்தும் மணிப்பூர் சென்று நடந்த கொடுமைகளை கேட்க பிரதமருக்கு நேரமில்லை. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்தாலும், தமிழ்நாட்டில் குடியேறினால் கூட வெற்றி பெற முடியாது.

தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்று கலைஞர் விரும்பியதால் மாவட்டம் தோறும் அரசு மருத்துவ கல்லூரி ஏற்படுத்தினார். ஆனால் தமிழ்நாட்டு பிள்ளைகள் பயன்படுத்தி முன்னேறக் கூடாது எனக் கருதி நீட் தேர்வை கொண்டு வந்து தடை போட்டனர். இட ஒதுக்கீடு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு அமுல்படுத்தபடும் எனக் கூறிய மோடி. மக்கள் தொகை கணக்கெடுப்பு சாத்தியமா? அதன் பின்பு இட ஒதுக்கீடுனு சொல்லி ஏமாற்றி வருகின்றனர். பண மதிப்பிழப்பு செய்த போது வங்கி வாசலில் நின்று மாண்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கொண்டு வந்து அதையும் செல்லாது என அறிவித்தார்கள். பண மதிப்பிழப்பால் பல்வேறு சிறு குறு தொழில்கள் அழிந்தது. நாட்டின் முதுகெலும்பான MSMEஐ முடக்கியது. அம்பானி குடும்பம் மட்டும் பிழைக்கிறது.

ஊழலுக்கு புதிய முறையில் தேர்தல் பத்திரம் மூலம் மூன்று மடங்கு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது, இதுதான் பா.ஜ.க. போராடும் விவசாயிகளை பா.ஜ.க நிர்வாகி ஜீப் ஏற்றி கொலை செய்கிறார்கள். தளபதி சொல்லியது போல் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தான் வருகின்ற தேர்தல். இந்த நாட்டில் நாமும் நம் பிள்ளைகளும் சுயமரியாதையுடன், பாதுகாப்புடன் வாழ இந்த தேர்தல் மூலம் நீருபியுங்கள். பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்கு கேட்டு அதிமுக, பாஜகவினர் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து நின்று கேட்டாலே இந்தப் பக்கம் விமானம் வராது. இங்குள்ள மக்களை ஏமாற்றி விடலாம் என திரும்பத் திரும்ப தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டுள்ளனர். இங்குள்ள சகோதரிகள் கேள்வி கேட்கத் தொடங்கினால் அவர்கள் காணாமல் போய்விடுவர். கொரோனா வந்தபோது, மழை வெள்ள பாதிப்பில் நாங்கள் தவித்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் என கேளுங்கள். தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தொகையை தந்து விட்டு அடுத்த முறை வந்து பேசுங்கள் என கூறி திருப்பி அனுப்புங்கள். இவ்வாறு அவர் கூறினார்.