மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடக்கம் தேர்தல் நாடகம்: சு.வெங்கடேசன் எம்.பி!

ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது என்று மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. திட்டமிடப்பட்ட காலத்தில் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில், 2020ஆம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. கடந்த தேர்தல்களின் போது, உதயநிதி ஸ்டாலினின் மதுரை எய்ம்ஸ் ஒற்றை செங்கல் பிரசாரம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பெருமளவு கைகொடுத்தது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. தற்போது வரை நிதி உதவி வராததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், இதனால்தான் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 33 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பிரதமர் அடிக்கல் நாட்டிய நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று வாஸ்து பூஜையுடன் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு தேர்தல் நாடகம் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தலை கணக்கில் கொண்டு மத்திய அரசு கடந்த 6 மாதத்திற்கு முன்பே லோக்சபாவில் மார்ச் மாதத்தில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று கூறி வருகிறது. ஆனால், நாங்கள் லோக்சபாவில் எய்ம்ஸ் கட்டுமானப்பணியின் ஒவ்வொரு கட்டமும் எந்தெந்த நேரத்தில் முடிக்கப்படும் என்ற விவரங்கள் கேட்டிருந்தோம். ஆனால், அந்த விவரங்கள் தற்போது வரை கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி,ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும் என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி. லோக்சபா தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துவங்குகிறது மத்திய அரசு. பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மூன்று முறை தமிழ்நாடு வந்த பிரதமர் , மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன ? இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் பதிவிட்டுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு இதனை அப்படியே கிடப்பில் போடவும் வாய்ப்புள்ளது. எனவே, அதுபோன்று நடக்காமல் விரைந்து கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.