திமுக எம்.பி. ஆ.ராசா ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ஒரு தேசமே அல்ல’ என்று பேசியதாகவும், ‘நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள்’ என்று சுய பிரகடனம் செய்ததாகவும் பாஜக தொழில்நுட்பத் துறை பிரிவு தலைவர் அமித் மாள்வியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய சமூக வலைதளப் பதிவை ஒட்டி பாஜக அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக, சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கில் நேற்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “உங்கள் கருத்துகளின் விளைவுகள் குறித்து உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துகளின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், பாஜக தொழில்நுட்பத் துறை பிரிவு தலைவர் அமித் மாள்வியா இன்று (மார்ச் 5) தனது எக்ஸ் பக்கத்தில் ஆ.ராசாவின் பேச்சு அடங்கிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். கூடவே, அதன் ஆங்கில மொழியாக்கத்தையும் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் அமித் மாள்வியா எழுதியுள்ள பதிவில், “திமுகவில் வெறுப்புப் பேச்சுகள் கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கிறது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் பேச்சுக்குப் பின்னர் இப்போது அக்கட்சி எம்.பி. ஆ.ராசா இந்தியாவை துண்டாடும் பார்வையை முன்வைத்திருக்கிறார். கடவுள் ராமரை அவதூறாகப் பேசியிருக்கிறார். மணிப்பூர் மக்களைப் பற்றி தரக்குறைவாகக் கருத்துச் சொல்லியிருக்கிறார். இந்தியா என்ற தேசத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறார்” என கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “அவர்கள் இந்தியை அவதூறாகப் பேசுவார்கள். இந்தியாவின் கதையை முடிப்பதாகப் பேசுவார்கள். அவர்கள் சிறு, சிறு குழுக்களை ஆதரிப்பார்கள். அவர்களின் கட்சியினர் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பாகிஸ்தான் வாழ்க என்பார்கள். அவர்களுக்கு இந்தியக் கலாச்சாரத்தை சிதைக்க வேண்டும். அவர்கள் இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அன்றாடம் அவர்களின் ஆணவம் வெளிப்படுகிறது” என்று சாடியுள்ளார்.
பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத், “இண்டியா கூட்டணியில் இருக்கும் கட்சியினருக்கு, இந்தியாவின் பாரம்பரியத்தை பழிப்பது, இந்துக் கடவுள்களை பொதுவெளியில் ஏளனம் செய்வது, இந்தியா என்ற கருத்தியலையே கேள்விக்குறியாக்குவது அடையாள முத்திரையாகிவிட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் இவ்வளவு தரம் தாழ்ந்துவிட தயாராகிவிட்டது. அரசியலுக்காக இத்தகைய விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும் தயாராகிவிட்டதா?” என்று வினவியுள்ளார்.