மேற்கு வங்கத்தில் 2வது முறையாக ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி தேசிய மகளிர் ஆணையம் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய பட்டியலின ஆணையம் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 2வது முறையாக இது நடந்துள்ளது. இதனால் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இதற்கிடையே தான் மேற்கு வங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி கிராமத்தில் தொடர்ந்து வன்முறை நடந்தது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் அங்குள்ள பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. இதில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தான் ரேஷன் ஊழலில் ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறையினரை அவரது ஆதரவாளர்கள் தாக்கி தப்பிக்க வைத்தனர். இது தான் பெரிய பிரச்சனையாக மாறியது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஷாஜகான் ஷேக்கின் அலுவலகம் தீவைக்கப்பட்டது. தொடர்ந்து வன்முறை நடந்து வந்த நிலையில் ஷாஜகான் ஷேக் சில நாட்களுக்கு முன்பு தான் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே தான் சந்தேஷ்காலி வன்முறை தொடர்பாக தேசிய பட்டிலின ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பட்டியலின ஆணையம் சார்பில் விசாரணை முடிந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும்மென அந்த ஆணையத்தின் அருண் ஹால்தார் பரிந்துரை செய்து திரெளபதி முர்முவிடம் அறிக்கை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை முடித்து ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் அறிக்கை அளித்துள்ளது.

தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்த பிறகு ரேகா சர்மா அளித்த பேட்டியில், ‛‛சந்தேஷ்காலி வன்முறை என்பது இப்போது தான் நடந்ததாக நினைக்க வேண்டாம். இதற்கு முன்பும் மாநிலத்தில் பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனாலும் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்” என்றார்.

சந்தேஷ்காலி வன்முறை தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டிலின ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அந்த வரிசையில் தற்போது தேசிய மகளிர் ஆணையமும் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.