எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆரணியில் பிரபலமான ஒருவர் போட்டியிடுவதாகவும், எனவே மன்சூர் அலிகான் வேலூரில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மன்சூர் அலிகான் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்து வெளியிட்டிருந்த அறிக்கை பெரும் கவனம் பெற்றிருந்தது. அதாவது, “மயிலம் மக்கள் மனம், மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுகவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! இவ்வளவு முயற்சித்தும் முடியலையே! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ன பட்சினியே, நினை, என் மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே!” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் ஆரணியில் போட்டியிடப்போவதில்லை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், “ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய ஜனநாயகப் புலிகள் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருந்தபோதிலும் ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவித்து தொகுதியில் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரணியில் பிரபலமான ஒருவர் போட்டியிடுகிறார். ஆரணியில் நிற்பதாக இருந்த நடிகர் மன்சூரலிகான் இப்போது வேலூரில் நிற்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
‘இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 24ம் தேதி சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், “மக்களவைத் தேர்தலில் எனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.