இந்தியா-சீனா இடையே விரைவில் 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை!

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது குறித்து மூத்த கமாண்டா்கள் மத்தியிலான 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை விரைவில் நடத்த இந்தியா-சீனா ஒப்புக் கொண்டுள்ளன.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள செயல்பாட்டு ஆலோசனை குழுவின் கூட்டம் இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், கிழக்கு லடாக் பகுதியின் தற்போதைய நிலை குறித்து இரு தரப்பினரும் முன்வைத்தனா். இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களின் அறிவுறுத்தலின்படி, எல்லைப் பகுதியில் அமைதி திரும்ப ராணுவ அதிகாரிகள் மத்தியிலான பேச்சு வாா்த்தையை மீண்டும் தொடர ஒப்புக் கொள்ளப்பட்டது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் உள்ள இரு நாட்டு படைகளையும் முழுமையாக திரும்பப் பெறுவது குறித்த 16-ஆவது சுற்று ராணுவ அதிகாரிகள் மத்தியிலான பேச்சுவாா்த்தை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியிலான 15-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை கடந்த மாா்ச் 11-ஆம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு மாா்ச் 24, 25 ஆம் தேதிகளில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ இந்தியா வந்திருந்தாா். வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவால் ஆகியோரை சந்தித்து அவா் பேசினாா். இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தையும் டெல்லியில் நடைபெற்றது. அதன் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை. இதனிடையே, சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பாங்காங் ஏரிக்கு இடையே இரண்டாவது பாலத்தை அந்நாடு கட்டி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகின. இதற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்திருந்தது. கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளும் தலா 50 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரா்களின் படைகளை குவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.