தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது பாஜக கையில் இருக்கிறது: மனோ தங்கராஜ்!

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவின் வாங்கிக்கணக்கை தேர்தல் ஆணையம் முடக்கவேண்டும் என்றும், அதுமட்டுமல்லாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது பாஜக கையில் இருப்பதாகவும் பேசியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தொடர்ந்து அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து சூடு பறக்கும் கருத்துக்களை கூறிவருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரியில் நேற்றுபத்திரிகையாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.

அப்போது பேசிய மனோ தங்கராஜ், பாரதிய ஜனதா கட்சியின் வங்கிக் கணக்கை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக செயல்படுவதாக உச்சநீதி மன்றமே கூறியுள்ளது. சாதாரண மாணவர்கள் படிப்பிற்காக கடன் வாங்கி, அந்த கடனை கட்ட தாமதமானால் அவர்களின் வீட்டை ஜப்தி செய்துவிடுகிறது பாஜக அரசு. அதுமட்டுமல்லாது, தேர்தல் பாத்திரத்தை கொடுத்த பணக்காரர்கள் பட்டியலை வெளியிட நான்கு மாதங்கள் கேட்டிருக்கிறார்கள். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் இப்போது பாஜகவின் கையில் இருந்து செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.. அதனால், பாரதிய ஜனதா கட்சியின் வாங்கிக்கணக்கை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும் எனவும் பேசியிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

போதை பொருள் கடத்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், போதை பொருட்கள் கிடைத்தது பாஜாகவிற்கு நெருக்கமான அதானியின் துறைமுகத்தில்தான். அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்கி வருகிறது மத்திய அரசு.. துறைமுகங்களை தனியார் மயமாக்கி தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது. தமிழ் நாடு பொறுத்தவரையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறார் என்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

சனாதன வழக்கு தீர்ப்பு குறித்த கேள்விக்கு, மூட நம்பிக்கை இல்லாத, சமத்துவமான, பகுத்தறிவுடனான நல்ல சமூகத்தை உருவாக்கவே இப்படியாக பேசப்படுகிறது. இதனாலேயே, தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் பல வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால், வட மாநிலங்களில் கொடூர செயல்கள் நடந்து வருகிறது என ஸ்பெயின் நாட்டு பெண்ணின் பாலியல் பலாத்கார சம்பவத்தை முன்னிறுத்தி பேசி இருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக பேசப்படுகிறது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த மனோ தங்கராஜ், அண்ணாமலைக்கு வெற்றிவாய்ப்பு மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளார்.