கஞ்சாவும், மதுபானங்களும் அனைத்து மாநிலங்களிலும் தடை செய்ய வேண்டும்: திருமாவளவன்

கஞ்சாவும், மதுபானங்களும் அனைத்து மாநிலங்களிலும் தடை செய்ய வேண்டும். மதுவும், கஞ்சாவுமே பல குற்றச்செயல்களுக்கு காரணமாக இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமியை, ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி கஞ்சா போதையில் இருந்த இளைஞர் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியின் ஆடைகளை கிழித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த 57 வயது நபரும் அந்த இளைஞருடன் சேர்ந்த அந்த சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார். இதில் சிறுமி கத்தவே, பயந்து போன அவர்கள் சிறுமியை அடித்து கொலை செய்து, பின்னர் மூட்டையில் கட்டி கால்வாயில் வீசிச் சென்றனர்.

இந்த சம்பவம் புதுச்சேரியை பற்றி எரியச் செய்திருக்கிறது. கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி, சிறுமியின் உறவினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும், இங்கிருந்து தான் புதுச்சேரிக்கு கஞ்சா சப்ளை ஆவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் இந்த குற்றச்சாட்டு குறித்து விசிக தலைவர் திருமாவளனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அகில இந்திய அளவில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரிப்பதற்கு பாஜக அரசாங்கம் தான் காரணம் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை நானும் நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறேன். அதானி துறைமுகங்கள் மூலமாகவும், விமான நிலையங்கள் வாயிலாகவும் போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பாஜகவை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் மட்டும் போதைக்கு எதிராக பேசினால் போதாது. அகில இந்திய அளவில் அவர்கள் பேச வேண்டும். ஆளும் பாஜக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற போதைப்பொருட்களால் தான் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட அவல சம்பவம் நடந்திருக்கிறது. இது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இதுபோன்ற குப்பை செயல்கள் பெருகாமல் தடுக்க வேண்டுமானால், அனைத்து விதமான போதைப்பொருட்களையும், மதுபானங்களையும் தடை செய்ய வேண்டும். இதை தடை செய்வது பற்றி மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.