புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம்!

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல், பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, உடல் அடக்கம் செய்வதற்காக சிறுமியின் இல்லத்தில் இருந்து மயானத்துக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். 10 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மயானத்தை அடையும் முன்பாக வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட சிறுமியின் உடல் பாப்பம்மாள் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் உடலுடன் அவரின் புத்தகப்பை பை மற்றும் பொம்மைகள் என அவர் பயன்படுத்திய பொருட்கள் சேர்த்து புதைக்கப்பட்டன.

முன்னதாக, இன்று காலை புதுச்சேரி மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது. இதையடுத்து இந்தக் குழு, சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்று கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற ஐந்து நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி கொலை செய்யப்பட்ட விவேகானந்தன் வீட்டில், இன்று காலை தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்குள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விசாரணை தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், குற்றவாளிகள் இரண்டு பேர் மற்றும் சந்தேகப்படக்கூடிய ஐந்து நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக, ஜிப்மர் ஆய்வுகத்துக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது என்று குறிப்பிட்டனர்.

இதற்கிடையே, சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.