மதுரை நத்தம் நான்கு வழிச்சாலை சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது!

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை சிலர் அடித்து நொறுக்கி உள்ளார்கள்.. உள்ளூர் வாகனத்துக்கு கட்டணம் கேட்டதால் அடித்து நொறுக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதுரை மாநகரத்தின் வளர்ச்சிக்காக போடப்படும் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுரையை சுற்றிலும் சுங்கச்சாவடிகள் அதிக அளவில் உள்ளன. தேனி சாலையை தவிர மற்ற எந்த சாலை வழியாக போனாலும் சுங்கச்சாவடியை கட்டாயம் பார்க்கலாம். மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளத்தில் இருந்து, நத்தம் மற்றும் துவரங்குறிச்சி வரை ரூ.1,744 கோடியில் புதிய நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. புதிய பைப்பாஸ் சாலை வழியாக மதுரையின் மையப்பகுதியில் இருந்தே, நத்தம் மற்றும் துவரங்குறிச்சி வழியாக திருச்சி சென்றால் மிக வேகமாக திருச்சிக்கு போய்விட முடியும். புதிய பைப்பாஸ் காரணமாக திண்டுக்கல்லுக்கு வாடிப்பட்டி, கொடைரோடு வழியாக போகாமல் நத்தம் வழியாக விரைவாக போக முடியும்.

மதுரை மக்கள் தற்போதைய நிலையில் திருச்சி செல்ல, மேலூர் விராலிமலை வழியாக பயணிக்கிறார்கள். இதுவும் நான்கு வழிச்சாலை தான். ஆனால் இந்த சாலையில் பயணிக்க மாட்டுத்தாவணி சென்று அங்கிருந்து போக வேண்டும். அதேநேரம் தல்லாகுளத்தில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சியை பிடித்து திருச்சி போனால் மிகவும் பக்கம். இந்த சாலையில் தான் நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை எப்படி என்றால் துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் வரை 25.5 கி.மீ தூரத்திற்கும், நத்தத்தில் இருந்து மதுரை வரை 35.5 கி.மீ தூரத்திற்கும் நான்கு வழிச்சாலை போடப்பட்டிருக்கிறது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மதுரையில் மேம்பாலத்துடன் செல்லும் இந்த சாலையில் திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்ல பயண நேரத்தை வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, மேலூர் வழியாக மதுரைக்கு வருவது அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை நத்தம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கார் மற்றும் டிராக்டருக்கு ரூ.180 கட்டணம் வாங்கப்படுகிறது. மினி வேன், டெம்போ டிராவல்ஸ் வாகனத்திற்கு ரூ.290 ரூபாய் கட்டணமும், பஸ் மற்றும் நான்கு சக்கர சிறிய ரக கண்டெய்னருக்கு ரூ.605 கட்டணமும், ஆறு சக்கர கண்டெய்னருக்கு 660 ரூபாயும், 8 சக்கர கண்டெய்னருக்கு ரூ.1155 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக கட்டணம் வசூல் செய்யும் சுங்கச்சாவடி என்ற பெருமையை மதுரை நத்தம் சாலை சுங்கச்சாவடி இருக்கிறது. இந்த சுங்கச்சாவடியில் கடந்த ஒரு மாதமாகவே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பரளிபுதூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் பதிவு கொண்ட செப்டிங் டேங்க் லாரிக்கு சுங்கக் கட்டணம் கேட்டதால் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் சுங்கச்சவாடியை சிலர் அடித்து நொறுக்கி உள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கழிவுநீர் வாகனத்தை ஓட்டி வந்தவருக்கும், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நபர் அங்கிருந்து சென்று பின்னர், இருசக்கர வாகனத்தில் வந்தார். அவருடன் 10க்கும் மேற்பட்டோர் வந்தனர்.. அவர்கள் இருசக்கர வாகனத்தை கொண்டு சுங்கச்சாவடியில் வாகனங்களை செல்லவிடாமல் மறித்தனர். பின்னர் சுங்கச்சாவடியில் இருந்த கேமராக்கள், தடுப்புகள், பூந்தொட்டி போன்றவற்றை உடைத்து ரகளையில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.