தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்: செல்லூர் ராஜு!

கஜினி போல தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் அங்கன்வாடி மையம் பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகை தருவது பற்றி விமர்சித்தார். பிரதமர் மோடி அண்மையில் சென்னை வந்த நிலையில் மீண்டும் வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்துப் பேசிய செல்லூர் ராஜு, “தமிழ்நாடு வரும் மோடி எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் பாடுகிறார். அவர்களின் தலைவர்களைப் பற்றி பேசுவதில்லை. அவர்களின் ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. அதிமுகவின் ஓட்டை ஏமாற்றி வாங்கிவிட பார்க்கிறார் மோடி. தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள். பிரதமர் மோடி கஜினி மாதிரி எத்தனை முறை படையெடுத்தாலும், தமிழ்நாடு மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள். எங்கள் தலைவர் சொன்னது போல, அரசியலில் மதம் இருக்கக்கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. தமிழ்நாடு மக்கள் எப்போதும் மத வெறியர்களுக்கு எதிராகத் தான் இருப்பார்கள். ஏனென்றால் மக்களுக்கு தெரியும் பாஜக ஒரு மதவாத கட்சி என்பது.

ராமர் கோவில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்லக்கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை? வாயிலேயே வடை சுடுவதில் இந்திய அளவில் மோடியும், தமிழகத்தில் ஸ்டாலினும் முதலிடத்தில் உள்ளனர். நீங்கள் நலமா என புதிதாக பெயர் வைத்து ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின். பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

மேலும், தேர்தல் பத்திர விவகாரம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, “எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் பத்திர விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிடுவது போல தெரிகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பயப்பட வேண்டியது காங்கிரஸ், திமுக தான். நாங்கள் இல்லை. எங்களுக்கு கவலை இல்லை. எனினும், தேர்தலுக்குள் வெளியிட வேண்டும்” என்றார்.

மேலும் கையை பிடித்து இழுத்தால் வராத கூட்டணி கட்சிகள் கண்ணடித்தால் மட்டும் வரவா போகிறது என அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்த கேள்விக்கு, “யாரு கையை பிடித்து இழுக்கிறது? அவர்கள் கூட்டணியை மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் பணம் செலவழிக்க வேண்டும் என்பதால் கூட்டணி கட்சிகள் திமுக உடன் உள்ளன. ஆளும் பாஜகவையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்த நாங்கள் மற்ற கட்சிகளை அழைப்போமா?” எனக் கேள்வி எழுப்பினார்.