முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நீங்கள் நலமா திட்டம் குறித்து ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
அரசின் நலத் திட்டங்கள் தொடர்பாக பயனாளிகளை தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறியும் நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பயனாளிகளை முதல்வரே நேரடியாக தொடர்புகொண்டு திட்டங்களின் கருத்துகளை கேட்டறிந்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திமுக அரசின் மூன்று ஆண்டு கால ஆட்சி என்பது சோதனைகளின் மொத்த உருவமாக காட்சி அளித்துகொண்டு உள்ளது. சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், வாகன வரி, பதிவுக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி பல கூடுதல் சுமைகளை மக்கள் மீது திமுக அரசு திணித்துக் கொண்டுள்ளது.
இது போதாது என்று விலை வாசி உயர்வு விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த சுமைகளை சுமந்து கொண்டு மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு, கல்விக் கட்டணம் ரத்து, நீட் ரத்து, சிலிண்டர் மானியம், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு என முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.
அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அனைவரும் போராடுகிறார்கள். சட்டம் ஒழுங்கானது சீரழிந்து வருகிறது. திமுகவைச் சேர்ந்தவர்களின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது.. போதைப் பொருள் நடமாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. டிஎன்பிஎஸ்சி மூலம் போட்டித் தேர்வுகள் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை. முடிவுகளை அறிவிப்பதிலும் தாமதம் உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டு மக்களின் நிலைமை சோதனைகள் நிறைந்ததாக காணப்படுகிறது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் நிம்மதியாக வாழ்வது போலவும், விலைவாசிகள் குறைந்துள்ளது போலவும், வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டது போலவும், கடன் சுமை குறைக்கப்பட்டது போலவும் நினைத்துக் கொண்டு நீங்கள் நலமா என்கிற திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் ‘நீங்கள் நலமா’ திட்டத்தை ஆரம்பித்து இருப்பது மக்களின் சோதனைகளை, வேதனைகளை மறைக்க முயற்சிக்கும் செயல் ஆகும். மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. வரும் தேர்தலில் திமுக அரசிற்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.