கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீஸார் ஆஜராகினர். எதிர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் ஆஜராகினார்.

கொடநாடு கொலை, கொள்ளை நடைபெற்ற பங்களாவில் நேற்று சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் மூன்று துணை காண்காணிப்பாளர்கள், தடயவியல் நிபுணர்கள் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் மூன்று மணி நேரத்திற்கு மேல் கொள்ளை சம்பவம் நடைபெற்ற அறைகள் மற்றும் பங்களாவிலும் கொலை சம்பவம் நடைபெற்ற நுழைவாயிலிலும் ஆய்வு மேற்கொண்டனர். இதன் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆய்வு புலன் விசாரணையின் ஒரு பகுதி என்ற நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்காக கூடுதல் சாட்சிகளிடையே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி அப்துல் காதர் உத்திரவிட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் தற்போதைய விவரங்களை நீதிபதி கேட்டறிந்ததார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்திருந்த மனு மீதான அரசு தரப்பு பதிலின்போது, நீதிபதி வழக்கு சம்பந்தப்பட்ட இடங்களை எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் எனவும், சட்டபூர்வமாக அவருக்கு முழு உரிமையும் அதிகாரமும் இருக்கிறது. மேலும் வழக்கு புலன் விசாரணையில் மற்றவர்கள் தலையிடுவதால் விசாரணை பாதிக்கப்படும்” என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி மற்றும் தடவியில் நிபுணர்கள் கொண்ட 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தது குறித்த எவ்வித அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை” என்று வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.