வரும் 2024 மக்களவை தேர்தலில் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. அதன்படி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டை உறுதிசெய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வந்தார். பின்னர், வைகோ மற்றும் முதல்வர் ஸ்டாலின் தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திட்டனர்.
தொகுதிப் பங்கீட்டுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி நிரந்தரமாக திமுகவுக்கு பக்க பலமாக இருப்போம். மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது மற்ற கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிடும். தொகுதி பங்கீட்டில் எங்கள் அனைவருக்கும் மனநிறைவு. மாநிலங்களவை இடம் குறித்து எதுவும் பேசவில்லை. இன்னும் 15 மாத இடைவெளி அதற்கு இருக்கிறது. அப்போது அது தொடர்பாக பேசுவோம்.” என்றார்.