காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல்: அண்ணாமலை!

காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல் என தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவையும்ம் காங்கிரஸ் கட்சியையும் சரமாரியாக தாக்கினார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பாஜகவின் அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

மேலும் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் இருக்கும் திமுக, சிலிண்டர் விலை குறைப்பு குறித்து பேசக் கூடாது என்றும் அதிரடியாக தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், போதை பொருள் விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது குறித்தும் விளாசினார். அதாவது போதை பொருள் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்த நிலையில் திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் கொங்கு மண்டலத்தில் பாஜகதான் முதன்மையான கட்சியாக உள்ளது என்று கூறிய அண்ணாமலை, மீண்டும் பாஜக ஆட்சிதான் அமையும் என்றும் திட்டவட்டமாக கூறினார். சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை பாஜக அரசு செய்யும் என்று உறுதியளித்த அண்ணாமலை, கோவையில் தான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்பினாலும் மாநிலத் தலைவராக தனக்கு பல கடமைகள் இருப்பதாக கூறினார்.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த நாடாளுமன்ற தேர்தல் அமையும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் திமுகவிற்கு 90 சதவீதம் பணம், தேர்தல் பத்திரம் மூலமாகதான் வந்துள்ளது என்று கூறிய அண்ணாமலை, இந்தியாவிலேயே ஒரு மாநில கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அதிக பணம் வந்துள்ள கட்சி என்றால் அது திமுகதான் என்றும் குற்றம்சாட்டினார்.