நிதி அமைச்சர் ஒரு நாள் பதவி விலகினால், எஸ்பிஐ, ஒரு வாரத்தில் தேர்தல் பத்திர நிதி விவரங்களை கொடுத்துவிடும் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி எம்.பி ராஜஸ்தானில் பாரத் ஜோடா யாத்திரையின் போது இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளைவழங்கினார். அதில், ‘காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 30 லட்சம் மத்திய அரசின் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்களுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 10 கோடி என மொத்தம் 5000 கோடி ரூபாய் தொழில் தொடங்க நிதி வழங்கப்படும். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த பிறகு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன் 1 வருடக் கட்டாய பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், ராகுல் காந்தி அறிவித்த வாக்குறுதிகள் குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்வுகளின் போது வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில் சட்டம் வலுவாக்கப்படும். ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும். புத்தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். புத்தொழில் நிறுவனங்களுக்கான மூலதன நிதியாக ரூ. 10 ஆயிரம் கோடி, அனைத்து தொகுதிகளிலும் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
அப்போது, தேர்தல் பத்திரங்கள் குறித்து தகவல் அளிக்க ஸ்டேட் வங்கி 6 மாத காலம் அவகாசம் கோரி இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், “21 ஆயிரத்து சொச்சம் தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்திரத்திற்கும் ஒரு நம்பர் இருக்கிறது. யாரால் மாற்றி ரொக்கம் எடுக்கப்பட்டது என்பதும் ஸ்டேட் வங்கிக்குத் தெரியும். பாரத ஸ்டேட் வங்கியின் 10 கிளைகளில் மட்டும் தான் தேர்தல் பத்திரம் வாங்கலாம், பாத்திரத்தை ரொக்கமாக மாற்றலாம். ஒவ்வொரு பத்திரத்தையும் யார் வாங்கியது, யாருக்கு அளிக்கப்பட்டது, யார் பணமாக மாற்றியது என்ற கணக்கு இருக்கும். இதைச் சொல்வதற்கு 24 மணி நேரம் போதும். இதைச் சொல்வதற்கு 6 மாதம் ஆகும் என எஸ்.பி.ஐ சொல்கிறது என்றால் இந்தியாவின் பெரிய வங்கி என பீற்றிக் கொள்வதற்கு அர்த்தமே இல்லை.
நான் சொல்கிறேன். இன்று இந்த அரசில் இருக்கும் நிதி அமைச்சர் ஒரு நாள் பதவியில் இருந்து விலகட்டும். நிதித்துறை செயலாளர் ஒரு நாள் விலகட்டும். அதற்கு மாற்றாக 24 மணி நேரத்திற்கு மட்டும் ஒரு நிதி அமைச்சர், நிதித்துறை செயலரை நியமிப்போம். அந்த 24 மணி நேரத்தில் ஸ்டேட் வங்கி, நாங்கள் பட்டியலை ஒரு வாரத்தில் தருகிறோம் எனச் சொல்வார்கள்.
அட்டவணையில் முதல் காலத்தில் தேர்தல் பத்திர நம்பர், அடுத்த கட்டத்தில் பத்திரத்தை யார் வாங்கியது, மூன்றாவது கட்டத்தில் அந்த பத்திரத்தை யார் ரொக்கமாக மாற்றியது எனக் குறிப்பிட வேண்டும். அவ்வளவுதான். என்ன பெரிய விஷயம் இது, இதுதான் தீர்வு. 24 மணி நேரத்தில் சொல்லக்கூடியது தான்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்தமாக சிரித்தபடி பதில் அளித்த ப.சிதம்பரம், “இதுபோன்று பலமுறை காங்கிரஸ் கட்சிக்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் உயிரோடு இருக்கிறது. 139வது ஆண்டிலே நடைபோட்டுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.