தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தனியார் மருத்துவமனையில் நடக்கும் மோசடி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் நடிகர் சத்யராஜ். ஹீரோ, வில்லன், குணசித்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனக்கு என்று தனி இடம் இவருக்கு உண்டு. நடிகர் சத்யராஜுக்கு சிபி என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சிபி சத்யராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் சத்யராஜின் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-
தனியார் மருத்துவமனையில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன். இது என் மருத்துவ நண்பர்கள் சொன்ன தகவல், சில தனியார் மருத்துவமனைகளில் சில மருத்துவமனைக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த பரிசோதனை, ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வைக்கிறார்கள். சில நோயாளிகள் குணமானதற்கு பிறகும் இரண்டு நாட்கள் கழித்தே அவர்களை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்பதை விட, பணம் செலவாகும் என்கிற பயம் தான் அதிகமாக இருக்கிறது.
எங்கள் அமைப்பு மூலம் சில நோயாளிகளுக்கு நாங்கள் உதவி செய்தாலும், அனைத்து நோயாளிகளுக்கும் உதவி செய்வது என்பது முடியாத விஷயம். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் எந்திரம் கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்து இருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோட நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் பேசி உள்ளார்.