விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சென்னையை தவிர்த்து கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

ஆதவ் அர்ஜுனா அமலாக்கத் துறை சோதனையை எதிர்கொள்வது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டில் இரண்டு முறை வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆதவ் அர்ஜுனா வீட்டில் சோதனை நடத்தினர்.

விசிகவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்டவர் ஆதவ் அர்ஜூனா. தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தலைவரான அவர், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் விசிகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். சில வாரங்களில் அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அவரை விசிக சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிட வைக்கவும் தலைமை திட்டமிட்டதாக தகவல் வெளியானது. அதற்காக திமுக கூட்டணியில் பொதுத்தொகுதி ஒன்றை கேட்டனர். ஆனால், திமுக கூட்டணியில் இரண்டு தனித் தொகுதி மட்டுமே விசிக ஒதுக்கப்பட்டது. லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா என்பது குறிப்பிடத்தக்கது.