முன்னாள் பிரதமர் வாஜ்பாயே காலில் விழுந்த மதுரை சின்னப்பிள்ளை தனக்கு வீடு வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கையை அடுத்து உடனடியாக வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் அழகர் கோயில் செல்லும் சாலையில் அப்பன் திருப்பதி அருகே உள்ளது பில்லுசேரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெருமாளின் மனைவி சின்னப்பிள்ளை, கிராமத்தில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைகளுக்காக அழைத்து சென்று வேலை முடிந்ததும் அவர்களுக்கான ஊதியத்தை நில உரிமையாளர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி ஒவ்வொருவருக்கும் பிரித்து கொடுத்தார். இவரும் விவசாய கூலித் தொழிலாளிதான். மதுரை சின்னப்பிள்ளையின் சேமிப்புகளை நிதி நிறுவனங்கள் ஏமாற்றிக் கொண்டு ஓடிவிட்டதால் விரக்தியில் இருந்த மூதாட்டிக்கு களஞ்சியம் என்ற சுய உதவிக் குழுதான் நம்பிக்கையை கொடுத்தது. தன்னை போன்ற ஏழை எளிய மக்களையும் அடித்தட்டு பெண்களையும் சிறு சிறு குழுக்களாக இயங்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரம் செய்தவர் சின்னப்பிள்ளை. வறுமை, கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட சமூக அவலங்களில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரக் காரணமும் சின்னப்பிள்ளைதான்.
இந்த சாதனைக்காக கடந்த 2001 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சுய உதவிக் குழுக்களின் அடையாளமாகத் திகழும் மதுரை சின்னப்பிள்ளைக்கு ஸ்ரீ சக்தி புரஸ்கார் மாதா ஜீஜாபாய் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வழங்கிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வழங்கினார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தது. அதன் பிறகு அதே ஆண்டு மும்பையில் பஜாஜ் நிறுவனம் சின்னப்பிள்ளைக்கு பஜாஜ் ஜானகி தேவி புரஸ்கார் விருதை வழங்கி கவுரவித்தது. தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் பொங்கல் திருநாளில் பொற்கிழி வழங்கினார். இதனிடையே முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018ஆம் ஆண்டு ஔவையார் விருது வழங்கினார். கடந்த 2019ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சின்னப்பிள்ளைக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். பல்வேறு விருதுகள் வந்த வண்ணம் இருந்தாலும் தன்னுடைய களஞ்சியம் அமைப்பின் மீதான பற்று காரணமாக அதன் வளர்ச்சிக்காக சின்னப்பிள்ளை சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, ஒடிஸா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு பயணம் செய்தார். அங்கும் பிரச்சாரம் செய்து வறுமை, கந்து வட்டி கொடுமை, வரதட்சிணை கொடுமை, மது போதை உள்ளிட்டவைகளால் பாதிப்புக்குள்ளாகிய பல லட்சம் ஏழை பெண்களை மீட்டெடுத்தார். 72 வயதிலும் தளர்வடையாமல் சமூகப்பணியாற்றி வருகிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு ஸ்ரீ சக்தி விருதுக்கு பிறகுதான் இவரது பில்லுசேரி கிராமத்திற்கு சாலை வசதியும் பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தனது மூத்த மகனின் வீட்டில் வாழ்ந்து வரும் சின்னப்பிள்ளைக்கு இதுவரை சொந்த வீடு இல்லை. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கவில்லை என மதுரை சின்னப்பிள்ளை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
ஒரு சென்ட் பட்டா வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் தனக்கு வீடு வழங்கவில்லை. எனவே தமிழக அரசு தனக்கு வீடு வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே 1 சென்ட் இடம் உள்ள இடத்தில் மேலும் 380 சதுர அடி சேர்த்து சின்னப்பிள்ளைக்கு உடனடியாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கலைஞர் கனவு திட்டம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.