நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை திமுக கொடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் இந்திய முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மேலும், விடுதலை சிறுத்தைகளுக்கு 2, மதிமுகவுக்கு 1 சீட் என்ற ரீதியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் மட்டும் ஒதுக்கப்பட்டது. இப்படி அனைத்து கட்சிகளுடனும் ஒப்பந்தம் இறுதியான நிலையில், முதன்முதலில் பேச்சுவார்த்தை தொடங்கிய காங்கிரஸுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது.
காங்கிரஸ் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டு வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை இழுபறியிலேயே சென்று கொண்டிருந்தது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு திமுக – காங்கிரஸ் இடையோன தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டியது. அதன்படி, காங்கிரஸுக்கு 10 சீட்டுகளை திமுக ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் 9, புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் இதே தொகுதிகள் தான் காங்கிரஸுக்கு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில் ,
40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் களம் காண்கிறது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ‘இந்தியா’ கூட்டணி மிகவும் ஒற்றுமையாக உள்ளது. என தெரிவித்தார்.