போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.

உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் இந்தியாவில் இருந்து மெத்தம்பெட்டைமைன் போதைப் பொருள் தயாரிக்கும் மூலப் பொருள் சூடோபெட்ரைன் அனுப்பப்படுவதாக நியூசிலாந்து சுங்கத்துறை, ஆஸ்திரேலிய போலீஸ், அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆகியவை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து டெல்லி போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், மேற்கு டெல்லியில் உள்ள ஒரு குடோனில் கடந்த மாதம் 15-ம்தேதி சோதனை செய்தனர். இதில் 50 கிலோ சூடோபெட்ரைன் சிக்கியது. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் பின்னணியில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தியுள்ளார். இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2,000 கோடி. டெல்லியில் தனது ஆட்கள் சிக்கியதும் ஜாபர் சாதிக் தலைமறைவானார். திருவனந்தபுரம், புனே, மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் இந்தி சினிமா தயாரிப்பாளர்கள், முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அரசியல் கட்சிக்கு இரு முறை ரூ. 7 லட்சம் நிதி அளித்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த முக்கிய நபருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விரைவில் சம்மன் அனுப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறையும் நிதிமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரிடம் விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.