தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மதுரை நீதிமன்றத்தில் 71 பேர் ஆஜர்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 71 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

தூத்துக்குடியில் தொழிலதிபர் அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையிலிருந்து வெளியாகும் புகை, கழிவுநீரால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். தேசியளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தின் 100 வது நாளான மே 22, 2018 அன்று ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2 பெண்கள் உள்பட 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் உறவினர்கள், போராட்டக்குழுவினர், தூத்துக்குடி மக்கள், நேரடி சாட்சிகள், மறைமுக சாட்சிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கால நீட்டிப்புகளை கடந்து சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார். அதன் பின்னர் கடந்த 18 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அருணா ஜெகதீசன் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ 101 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 27 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜரானதால், மீதமுள்ள 71 பேர் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் இவர்கள் இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் குற்றப்பத்திரிகை விபரம் உள்ளவை குறித்து நீதிமன்றம் விசாரிக்கும். இந்த வழக்கின் முடிவில் இது சிபிஐ நீதிமன்றம் அல்லது சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு மாற்றப்படும்.