விஜய் இல்லாம நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையாது: விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகர் விஜயும் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். விஷால் விஜய்க்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர் செயல்பட்டு வருகிறார் இதேபோல பொதுச் செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்தி உள்ளிட்டவர்களும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அடுத்தடுத்து சங்க நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதனிடையே சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு கட்டத்தில் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்பே தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கட்டிடப் பணிகள் துவங்கப்பட்டு அடுத்தடுத்து கட்டிடம் குறித்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கூடிய நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்கம் கட்டுவதற்காக 40 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற திட்டமிட்டனர். இதற்கு நிர்வாகிகள் அனைவரும் ஒப்புதல் அளித்தநிலையில் இந்த கடனை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி அடைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் சங்க கட்டிடம் கட்டுவதற்காக முன்னணி நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து நிதியுதவி அளித்து வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. நடிகர்கள் கார்த்தி, சூர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் சங்க கட்டிட நிதிக்காக முன்னதாக நிதியுதவி அளித்த நிலையில் நடிகரும் அமைச்சருமான உதயநிதியும் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக அளித்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் இந்த கட்டிட நிதியாக ஒரு கோடி ரூபாயை கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யும் சங்க கட்டிட நிதியாக ஒரு கோடி ரூபாய் அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் விஜய்க்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். Thank you என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே, ஆனால் ஒருவர் தன்னுடைய இதயபூர்வமாக உதவி செய்யும்போது அந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் அதிகம். என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகரான தளபதி விஜய் பிரதர் நடிகர் சங்க கட்டிட வேலைகளுக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கு நன்றி. காட் பிளஸ் யூ விஜய் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த சங்க கட்டிடம் விஜய்யின் சப்போர்ட் இல்லாமல் முழுமையடையாது என்பது எங்களுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டிடம் முழுமையடைய விஜய் அளித்துள்ள நிதியுதவி தங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விஷால், தற்போது விஜய்யின் ஸ்டைலில் கூற வேண்டும் என்றால் நன்றி நண்பா என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.