திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி: பிரதமர் மோடி!

திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல.. நம்முடைய கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி என்று இன்று கன்னியாகுமரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளை தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டை முழு உற்சாகத்துடன் தமிழகம் மீண்டும் கொண்டாட ஏற்பாடுகளை செய்தது நம்ம பாஜக அரசு என்றும், தமிழகத்தின் எந்த ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும் சரி மோடி இருக்கும் வரை அதை யாரும் அசைக்க முடியாது என்று பிரதமர் மோடி பேசினார். கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

திமுக தமிழ்நாட்டின், தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல.. நம்முடைய கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி. அயோத்தியில் ராம் மந்திர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தமிழகம் வந்து இங்கே இருக்கிற பழமையான கோவிலுக்கும், புனித தலத்திற்கும் சென்று வழிபட்டேன். ஆனால் திமுக அரசு என்ன செய்தது. அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக நிகழ்சியை பார்க்க கூட அவர்கள் யாருக்கும் விருப்பம் இல்லை. இது மட்டுமின்றி தமிழகத்தில் அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியை பார்ப்பவர்களை கூட பார்க்கவிடாமல் தடை விதிக்க முயற்சித்தனர். அவ்வளவு வெறுப்பு. உச்ச நீதிமன்றமே தமிழக அரசை தண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் கலாசாரம் மீதும் பண்பாட்டின் மீதும் பாரம்பரியத்தின் மீதும் எப்போது திமுக வெறுப்பினை கக்கி கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் அடையாளத்தை பெருமையை பாதுகாக்க என்றும் முன்னனியில் பாஜக உள்ளது. அவர்களின் பேச்சுக்களையும், தூற்றல்களையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த திமுக – காங்கிரஸ் அரசு மவுனம் காத்தது. தமிழகத்தின் கலாச்சாரத்தை, பாரம்பரிய விளையாட்டை அழிக்க நினைத்தது. ஜல்லிக்கட்டை முழு உற்சாகத்துடன் தமிழகம் மீண்டும் கொண்டாட ஏற்பாடுகளை செய்தது நம்ம பாஜக அரசு. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பெருமை. ஒரே ஒரு விஷயம் சொல்றேன் நண்பர்களே.. ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி.. தமிழகத்தின் வேறு எந்த பாரம்பரியமாக இருந்தாலும் சரி.. தமிழகத்தின் எந்த ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும் சரி மோடி இருக்கும் வரை அதை யாரும் அசைக்க முடியாது.

புதிய பாராளுமன்றம் கட்டி அங்கே ஒரு செங்கோலை நிறுவினோம். தமிழகர்களின் பெருமை, தமிழக மக்களின் பெருமை, தமிழ் மன்னர்களின் பெருமையை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எப்போதுமே சொல்கிற மாதிரி நிறுவியுருந்தோம். இதனை கூட திமுகவினர் புறக்கணித்தார்கள். இதுபோன்ற தமிழர்களின் பெருமையை யாரும் புறக்கணிக்க முடியாது. அப்படி புறக்கணிக்க இந்த மோடி அனுமதிக்கமாட்டான். இது மோடியின் கியாரண்டி.

கன்னியாகுமரி எப்போதுமே பாஜகவுக்கு ஏராளமான அன்பை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. உங்கள் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் திமுக காங்கிரசின் இந்தியா கூட்டணி எப்படா இங்கு வாய்ப்பு கிடைக்கும், இங்குள்ள மக்களை சுரண்டலாம் என்று காத்து கிடக்கிறது. நீங்க அவர்களது நடவடிக்கைகளை எல்லாம் கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து பார்த்தால் அவர்களது எண்ணம் உங்களுக்கு புலப்படும். ஆனால் வாஜ்பாய் வடக்கு தெற்கு வழித்தடத்திற்கு ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தார். கன்னியாகுமரி நரிக்குலம் பாலம் பல ஆண்டுகளாக அவர்கள் நிறைவேற்றாமல் வைத்திருந்தார்கள். 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதை நாங்கள் நிறைவேற்றினோம்.

மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது.நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள். தமிழகத்தில் இண்டியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். இண்டியா கூட்டணி 2ஜி உள்ளிட்ட ஊழல்கள் நிறைந்த கூட்டணி. இண்டியா கூட்டணி ஊழல் செய்வதற்கு தான் போராடுகிறது. பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது, ஆனால் திமுக – காங்கிரஸ்கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது.

திமுக-காங்கிரஸின் இண்டியா கூட்டணியால் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவே முடியாது. அவர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும். அவர்களுடைய கொள்கையே அரசியலில் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான். ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், மற்றொரு பக்கம் இண்டியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள் இருக்கின்றன.

5ஜி போன்ற திட்டங்களை பாஜக மக்களுக்கு கொடுக்கிறது. பாஜகவின் பெயரில் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் இருக்கிறது. ஆனால் இண்டியா கூட்டணியில் லட்சக்கணக்கான கோடிகளில் நடைபெற்ற ஊழல்தான் இருக்கின்றன. 2ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுக தான். பாஜக ஏராளமான விமான நிலையங்களை கட்டியது, ஆனால் இண்டியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல் தான் நடந்தது. இந்தப் பட்டியலை சொன்னால் நீளமாக சென்று கொண்டே இருக்கும். மீனவர்களின் நலனுக்காக பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. வஉசி துறைமுகத்தை பாஜக புதுப்பித்துள்ளது. வஉசி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. .

நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து அலை கிளம்பியுள்ளது.. இந்த அலை நீண்ட தூரம் பயணம் பயணிக்கப்போகிறது .. 1991ல் கன்னியாகுமரி இருந்து காஷ்மீர் யாத்திரை சென்றேன், இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன்.. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.