“ஒரு சிறந்த தலைவன் என்றால் அவனுக்கு உழைப்பும், உறுதியும், நியாமும், தர்மமும் இருக்க வேண்டும், இது அத்தனையும் பெற்ற ஒரே தலைவன் நமது மோடிஜி தான்” என்று சரத்குமார் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, பிரதமர் நரேந்திர மோடியை அடிக்கடி தமிழ்நாட்டில் காண முடிகிறது. கடந்த ஒரே மாதத்தில் இரண்டு முறை தமிழகம் வந்த மோடி, திருப்பூரிலும், சென்னையிலும் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரிக்கு வருகை தந்த மோடி அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு தான் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த சரத்குமாரும், தனது மனைவி ராதிகாவுடன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சரத்குமாரை பார்த்ததும், பிரதமர் மோடி உடனே அவரது அருகில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் ராதிகாவுடனும் பேசினார்.
இந்நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சரத்குமார், பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளினார். அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சியை பற்றி இங்கு பலர் பேசினார்கள். நான் 50 நாட்கள் பிரச்சாரம் செய்யும் போது, அதை பற்றி இன்னும் தெள்ளத்தெளிவாக, சிறப்பாக, ஆழமாக உங்கள் மனதில் பதிய வைக்க காத்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாகவே, எடுத்த காரியத்தை முடிக்காமல் நான் இருந்ததில்லை. உடனே சிலர் கேட்பார்கள்.. நீங்கள்தான் உங்கள் அரசியல் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டீர்களே.. அப்படி எப்படி பயணம் செய்வீர்கள் என்று.
ஊழலற்ற, சிறந்த, தன்னிகரற்ற தலைவன் நம் நாட்டிற்கு தேவை என்கிற அடிப்படையில் தான், பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவில் சேர்ந்திருக்கிறேன். 57 ஆண்டுகள் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து விட்டார்கள் இந்த திராவிடக் கட்சிகள். அது என்ன திராவிடம் என்று எனக்கு புரியவில்லை. திராவிடத்தை புரிந்து கொள்ளாமல், திராவிடம் திராவிடம் என்று மட்டும் சொல்லி ஒரு குடும்ப அரசியலும், மன்னராட்சியும்தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பல முறை பேசியிருக்கிறேன். இந்திய அளவில் மட்டுமல்ல, உளக அளவிலே இந்தியனின் பெருமையை ஒரு தலைவன் எடுத்துச் சென்றிருக்கிறார் என்று சொன்னால், அது பிரதமர் மோடிஜி அவர்கள் தான். அவரது வாழ்க்கை வரலாற்றை தெரியாவதர்கள் அவரை பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு சிறந்த தலைவனை நாம் அடையாளம் காட்ட வேண்டும். ஒரு சிறந்த தலைவனுக்கு உழைப்பு இருக்க வேண்டும். உறுதி இருக்க வேண்டும். நியாயம் இருக்க வேண்டும். தர்மம் இருக்க வேண்டும். இதை அனைத்தையும் ஒருங்கே பெற்ற தலைவன் தான் மோடி அவர்கள்.
1979-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை பற்றி நான் சொல்கிறேன். குஜராத் மாநிலம் மச்சு என்ற ஆற்றிலே பயங்கரமாக வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மோர்பி அணை உடைந்து நொறுங்குகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள். உயிருக்கு போராடுகிறார்கள். அந்த சமயத்தில், அந்த மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரையும் துச்சம் என்று நினைத்து ஆற்றில் பாய்ந்த ஒருசிலரில் நமது மோடியும் ஒருவர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்பொழுது அவருக்கு வயது 29 மட்டுமே. அதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அவரது பயணம் நீண்ட நெடிய பயணம். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஏழை சூழலில் வளர்ந்த ஒருவர், இந்த நாட்டை ஆட்சி செய்வது நம் எல்லோருக்குமே மிகப்பெரிய நம்பிக்கையை தருகிறது. இவ்வாறு சரத்குமார் பேசினார்.