குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-
நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே மிகக் கடுமையாக நமது எதிர்ப்பை தெரிவித்தோம். மதம், இனத்தின் பெயரால் படுகொலைகள் நிகழும்போது, சொந்தநாட்டில் வாழமுடியாமல் அண்டை நாட்டுக்கு புலம்பெயர்வது தவிர்க்க முடியாதது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை முஸ்லிம் நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து கடந்த 2014 டிசம்பர்31-ம் தேதிக்கு முன்பு வந்தவர்களை மதஅடிப்படையில் அடையாளப்படுத்தி, குடியுரிமை வழங்குவதற்கான திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதில், முஸ்லிம்கள் தவிர அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு வந்தவர்களில் முஸ்லிம்கள் இருந்தால், அவர்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் விட்டுவிட்டு முகாம்களுக்கு செல்லவேண்டும். இதன்மூலம், அவர்களது வாக்குதேவை இல்லை, இந்துக்களின் வாக்குமட்டும் போதும் என்ற முடிவுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக வந்துவிட்டன.
இந்துக்கள் சாதி ரீதியாக சிதறி கிடக்கின்றனர். எனவே, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களால் இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, எளிதாக இந்துக்களை ஒன்று சேர்க்கின்றனர். 100 சதவீத இந்துக்களையும் தன் பக்கம் இழுத்தால், நினைக்கும் சாம்ராஜ்ஜியத்தை 1,000 ஆண்டுகளுக்கு பாஜகவால் நடத்த முடியும்.
தேர்தல் பத்திரம் என்னும் சட்டப்பூர்வமான ஊழலை பாஜக செய்துள்ளது. இதை வெளிக் கொணர்ந்தவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட். கடவுளின் அவதாரம்போல வந்திருக்கிறார். இதையெல்லாம் மறைக்க, போதைப் பொருள் விவகாரத்தை மத்திய பாஜக அரசு கையில்எடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.