“கல்வி மாணவச் செல்வங்களுக்கானது. அதில் அரசியல் செய்யக்கூடாது. அதனால், புதிய கல்விக் கொள்கையை என்றைக்குமே தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது” என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடெங்கும், தமிழ்நாடு பாடநூல்கழகத்தின் 100 விற்பனை நிலையங்களைத் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான முதல் விற்பனை நிலையம் பாரம்பரியமிக்க புத்தக நிலையமான ஹிக்கின் பாதம்ஸில் (Higginbothams) நேற்று தொடங்கப்பட்டது. அந்த வகையில், திருச்சி மேலரண் சாலையில் ராசி மற்றும் சுமதி பப்ளிகேஷன்களில் இரண்டு மற்றும் மூன்றாவது விற்பனை நிலையத்தை இன்று (சனிக்கிழமை) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு என மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வித்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் அதற்காக அமைக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க, தமிழகத்துக்கு என்ன தேவை என்பதறிந்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம்.
புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறீர்கள் என மத்திய அரசு எங்களிடம் கேட்கிறது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் .கல்வி மாணவச் செல்வங்களுக்கானது அதில் அரசியல் செய்யக்கூடாது. அதனால்தான், புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆகையால், புதிய கல்விக் கொள்கையை என்றைக்குமே தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.