வங்கதேச பெண் ஒருவர் மேற்குவங்கத்தின் சுந்தரவன காடுகளை துணிச்சலாக கடந்து ஆற்றின் வழியாக நீந்தி தனது காதலனை திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் – வங்கதேசம் நாடு இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், கிருஷ்ணா மண்டல் என்ற வங்கதேச பெண் (22), இந்தியாவை சேர்ந்த அபிக் மண்டல் என்ற நபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இருப்பினும் அபிக் மண்டலிடம் பாஸ்போர்ட் இல்லாததால், கிருஷ்ணா மண்டல் சட்டவிரோதமாக இந்தியா – வங்கதேச எல்லையை கடக்க முடிவு செய்தார். பின்னர் சுந்தரவன காடுகளுக்கு இடையே கிருஷ்ண மண்டல் தனியாக நடக்க துவங்கியுள்ளார். பின்னர் மால்டா ஆற்றில் நீந்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கைகாலி கிராமத்தில் நுழைந்தார். இறுதியாக நரேந்திரபூரில் உள்ள ராணியாவில் தனது ஆன்லைன் காதலனை சந்தித்தார்.
பின்னர் அபிக் மண்டல் கொண்டுவந்த கார் மூலம் கொல்கத்தாவில் உள்ள காளி கோயிலுக்கு சென்றனர். இருவருக்கும் கோயிலில் திருமணம் நடைபெற்றது. கிருஷ்ணா மண்டலின் இந்த துணிச்சலான சாகச பயணம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்த நரேந்திரபூர் போலீசார், வங்கதேச பெண் கிருஷ்ணா மண்டலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக கிருஷ்ணா மண்டலை கைது செய்தனர். அவர், வங்கதேச தூதரகத்திடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது.