அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினைச் சார்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக தொடர்பாக,டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மனு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி டெல்லியில் பேட்டியளித்தார். அதில் பேசிய புகழேந்தி, ‘தேர்தல் ஆணையத்திடம் ஆறு முதல் 7 மனுக்களை வழங்கியுள்ளேன். அனைத்தையும் பெண்டிங் வைத்துக்கொண்டு எந்தவொரு ஆக்ஷனையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. அதன்படி, சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் முடிவு செய்வது தான். எங்களது ஓ. பன்னீர்செல்வம் அணியின் தரப்பு வாதம் ஆனதும் இதுதொடர்பானது தான். ஆறு, ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தேன். உச்ச நீதிமன்றம் ஒழுங்கீனமானவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது. ஆனால், அதிமுகவில் ஒழுங்கீனமானவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதுபோல், மலேசியாவில் இருந்து வந்த பெண் ஒருவர், அதிமுகவைச் சார்ந்த ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாகப் புகார் அளிக்கிறார். அத்தகைய புகார்களுக்கு உள்ளானவர்கள் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இதையெல்லாம் டெல்லி உயர் நீதிமன்றம் சரிசெய்யனும்.
அதிமுக விதிமுறைப்படி, இன்னும் அதிமுக கட்சியின் தலைமை யாருக்குண்டானது என்பது சர்ச்சையில் தான் இருக்கிறது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறது. அதன்பின் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி இருக்கிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தன்னைத்தானே, அதிமுகவின் பொதுச்செயலாளர் என்கிறார். இப்படியிருக்க நாட்டு மக்கள் எல்லோரும் அதிமுக பழனிசாமியிடம் சொல்வது ஏற்புடையது அல்ல. இந்த மாதிரியான மனுக்களை அதில் குறிப்பிட்டிருக்கிறோம். நானும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இரட்டை இலைச் சின்னத்தில் தான் நிற்போம் என்று கேட்கிறோம். அதைத் தேர்தல் ஆணையம் தான் முடிவுசெய்யும். அதற்குண்டான உத்தரவினை வேண்டும் என்றால் நீதிமன்றம் தான் போடும்.
இரட்டை சிலைச் சின்னம் முடக்கப்பட்டால், அதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு காரணமல்ல. நாங்கள் எத்தனையோ முறை சமாதானம் செய்யும் முறையில் இருந்தாலும், கட்சியை நாசம் செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து வருகிறார். இன்றைய தினம் சரியான கூட்டணிகூட கிடைக்காமல் அலையக்கூடிய வகையில் அதிமுக இருக்கிறது. தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மா ஜெயலலிதா அவர்களும் வளர்த்த அதிமுக கட்சியை அசிங்கப்படுத்தி, நாசம் செய்யும் பணியை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.
ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை இலை வேண்டும் என்று கேட்கிறோம். அதிமுகவை உரிமை கோரும் வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடந்து வருகிறது. நிச்சயமாக மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் போட்டியிடுவோம். முடிந்தவரை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முயற்சிப்போம்’’ என்றார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மதியத்துக்குப் பின், இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினை சார்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.