செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

அமலாக்கத் துறை வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள தனக்கு ஜாமீன் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இதன் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர், கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி அவரை கைது செய்தனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் வழக்கை முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீண்ட காலமாக சிறையில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் காணொலி காட்சிவாயிலாக ஆஜராகி, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரமோ, முகாந்திரமோ கிடையாது என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் மார்ச் 21-க்கு தள்ளி வைத்துள்ளார். அதேபோல செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீதிபதி எஸ்.அல்லி வரும் மார்ச் 21 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.