என் கற்பை காப்பாத்திக்க எனக்கு தெரியாதா?: சின்மயி!

பாடகி சின்மயி, மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த இந்த 32 வருடங்களில் நாங்கள் 42 வீடுகளை மாறி இருக்கிறோம். வாடகை வீட்டில் இருந்த போது பல மோசமான அனுபவங்களை நான் சந்தித்து இருக்கிறேன். வீட்டு உரிமையாளர்கள் எங்களுக்கு பல டார்ச்சர்களை கொடுத்தார்கள் என்று சின்மயி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பிரபலமானவர் தான் சின்மயி. இவர், ஏ.ஆர்.ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் தான் அவரது முதல் திரைப்பட பாடல். இதையடுத்து, டி.இமான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஜிவி பிரகாஷ் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி உள்ளார். பாடகியாக மட்டுமில்லாமல், சிறந்த டப்பிங் கலைஞராகரான இவர், சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா என பல நடிகைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இவர் நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாடகி சின்மயி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

நான் மும்பையில் இருந்து சென்னை வந்த போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டேன். வாடகைக்கு வீடு கூட கிடைக்கவில்லை, வீட்டில் அப்பா இல்லையா, ஏன் அவர் விட்டுட்டு போனாரு, யார் யார் எல்லாம் வீட்டுக்கு வருவாங்க என்று பல கேள்வியை கேட்டு தொல்லை கொடுத்தார்கள். இதைப்பார்த்து விட்டு, பாத்தியா பெண்களுக்கு நல்ல துணை வேண்டும் என்று பலர் பேச ஆரம்பித்து விடுவார்கள். அப்படி எந்த தேவையும் இல்லை. பெண்கள் எப்போதும் அவங்க காலில் நிற்க வேண்டும், அவங்க சம்பாதிக்க வேண்டும். யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலையில் எந்த பெண்ணும் இருக்கக்கூடாது.

மேலும், சென்னையில் 32 வருடங்களாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அதில் 42 வீடுகள் மாறி இருப்போம். அவ்வளவு மோசமான அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்து இருக்கின்றன. வாடகை வீட்டில் இருந்த போது பல மோசமான மனிதர்களை நான் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் ஏன்டா நாம வாழ்கிறோம் என்று நினைக்க வைத்தார்கள். தேவையில்லாமல் அனைத்து விஷயத்திலும் மூக்கை நுழைத்து எனக்கு அறிவுரை கூறினார்கள். என்னமோ இவர்கள் தான் என் கற்பை காப்பாற்றுவது போல நடந்து கொண்டார்கள். என் கற்பை எனக்கு பாதுகாத்துக்க தெரியும் என்ற சொல்லக்கூடிய தைரியம் அப்போ எனக்கு இல்லை.

மீ டூ விவகாரம் குறித்து பேசிய சின்மயி, அப்போது சொல்லாமல் இப்போது ஏன் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். அப்போது எனக்கு 19 வயசு அந்த வயதில் அந்த தைரியம் எனக்கு இல்லை. மீ டூ விவகாரத்திற்கு பிறகு தான் அனைவரும் குட் டச், பேட் டச் குறித்து பெண்களிடம் வெளிப்படையாக பேசுகிறார்கள். இதனால், 19 வயதில் அதை ஏன் சொல்லவில்லை என்று கேட்பவர்கள் அனைவரும் முட்டாள்கள். இந்த வயதிலுமே என்னால், பல விஷயத்தை தைரியமாக பேச முடியவில்லை என்று சின்மயி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.