குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், அதற்கான விதிமுறைகள் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சிஏஏ-வுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹூவா மொய்த்ரா, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்பட 237 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர், சிஏஏ-க்கு இடைக்கால தடை கோரினர். மேலும், யாருக்கேனும் குடியுரிமை வழங்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் அனுமதி கோரினர்.
அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சிஏஏ-க்கு எதிராக 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது, “அரசு பதில் மனு தாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் கேட்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இந்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
“பிரச்சினை என்னவென்றால், சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டப்படி, சட்டம் இயற்றப்பட்ட 6 மாதங்களில் விதிமுறைகள் வெளியிடப்பட வேண்டும். தற்போதைய சூழலில், இந்தச் சட்டத்தின்படி குடியுரிமை வழங்கப்பட்டு விட்டால் அதனை திரும்பப் பெற முடியாது என்பதுதான் தற்போதுள்ள பிரச்சினை. எனவே, இந்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என கபில் சிபல் வலியுறுத்தினார்.
“அரசு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். அதுவரை யாருக்கும் குடியுரிமை வழங்கக் கூடாது” என இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தினார். அப்போது, “இடைக்கால தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்த துஷார் மேத்தா, விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை” என்றார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் அரசு 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.