ஆளுநர் ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது எனக் கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர். என் ரவிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடங்கி, ஏராளமான விஷயங்களில் அரசும் ஆளுநரும் முரண்பட்டு வருகின்றனர். பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் விஷயத்தில் கூட ஆளுநர் – தமிழக முதல்வர் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் பதவியைத் துறந்துவிட்டு, லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ரகுபதி, “பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் நீதிபதிகள் அரசியலுக்கு வருவார்கள். ஆளுநர்கள், தேர்தலில் போட்டியிடுவார்கள். நம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூட பீகார் சென்று தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஒரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. அது உண்மையாக இருந்தால் நல்லதுதான். பீகாரில் முதலமைச்சராக விரும்பும் நோக்கத்தோடு நிதிஷ் குமாருக்கு போட்டியாக அவர் போகப்போகிறார் என்ற தகவல் தற்போது பரவத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி, பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுகவுக்கு தூக்கம் போய் விட்டதாக கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, “மோடிக்கு தான் தூக்கம் போய்விட்டது. நாங்கள் நிம்மதியாகத் தூங்குகிறோம். வெற்றிக்கனி எங்கள் கைகளில் இருக்கிறது. அச்சப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவதால் தோல்வி நிச்சயம் என்பது தெரிந்துவிட்டது. எனவே நிம்மதியாக சிறப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது திமுக கூட்டணி” என்றார்.
முன்னதாக, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், அமைச்சர் ரகுபதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சிவகங்கை தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ரகுபதியுடன் ஆலோசனை நடத்தினார் கார்த்தி சிதம்பரம். பின்னர், கார்த்தி சிதம்பரத்துடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ரகுபதி.