தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடரும்அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், இதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது. பன்னெடுங்காலமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தாலும்கூட எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சமீபகாலமாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு மாதக்கணக்கில் சிறை தண்டனைவிதிப்பதும் தொடங்கியுள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது படகுகளை விடுவதில்லை. இதனால் வாழ்வாதாரம் இழந்து தமிழக மீனவர்கள் பரிதவிக்கின்றனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காண பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இந்தப் போக்கு தொடருமானால் மத்திய அரசுக்கு தமிழர்கள் தக்க பாடம்புகட்டுவர். எனவே, இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.