அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து!

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் இபிஎஸ் மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா கூறியதாவது:-

முதன்முதலாக அதிமுக அலுவலகத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்ந்த இடம் இது. 2011ல் ஏற்பட்ட வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. 2011ல் கிடைத்த வெற்றிபோல் இப்போதும் மீண்டும் கிடைக்கும். 2026-ம் ஆண்டிலும் இந்தக் கூட்டணி நிச்சயம் தொடரும். நாளை நல்ல செய்தி தேமுதிக அலுவலகத்தில் அறிவிக்கப்படும். தேமுதிக அலுவலகத்துக்கு எடப்பாடி வரவுள்ளார். நாளைக்கு மிகப் பெரிய செய்தியை அறிவிப்போம்.

தேர்தல் என்றால் பலமுனை போட்டி வரும். பல தேர்தலை சந்தித்துள்ளது அதிமுகவும், தேமுதிகவும். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. யார் யார் கூட்டணி சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். இந்தக் கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக, தேமுதிக எல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தவர்கள்தான். ஆனால், இம்முறை எங்கள் கட்சி நிர்வாகிகள் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பினர். மேலும் முதலில் எங்களை அணுகியது அதிமுகதான். தேர்தல் என்பதால் பலர் போட்டியிடத்தான் செய்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.