ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பாஜக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தானது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவால் கழற்றிவிடப்பட்ட பாஜக தனியே கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது. பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் தான் நேற்று லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தான் அடுத்தடுத்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த வகையில் நேற்று மாலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயலத்தில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது. அதன்படி ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் ஜான்பாண்டியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதியின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஜான் பாண்டியனை பொறுத்தமட்டில் 3 தொகுதிகளை கூறி அதில் ஒன்றை கேட்டுள்ளார். அதன்படி தென்காசி, திருநெல்வேலி, இல்லாவிட்டால் ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி பாஜகவிடம் கோரிக்கையை வைத்துள்ளார். இதில் தென்காசி தனித்தொகுதியாகும். திருநெல்வேலி பொதுத்தொகுதி என்றாலும் கூட ஜான் பாண்டியனின் சொந்த தொகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் தான் இந்த ஜான் பாண்டியன். மேலும் ராமநாதபுரம் தொகுதியில் ஜான் பாண்டியன் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர். இதனால் இந்த 3 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நோக்கத்தில் அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். இருப்பினும் ஜான் பாண்டியன் கட்சிக்கு பாஜக எந்த தொகுதியை ஒதுக்கீடு செய்கிறது? என்பதை அறிய நாம் சற்று காத்திருக்க வேண்டும்.