திரிணமூல் காங்கிரஸ் மகுவா மொய்த்ரா மீது வழக்கு பதிய சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவு!

மகுவா மொய்தரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் மத்திய அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்பு உள்ளது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்த மகுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்று தனது எம்.பி ஐ.டி பாஸ்வோர்டை கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தெகாத்ராய் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மகுவா மொய்த்ரா மீது விசாரணை நடத்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணை லோக்பால் அமைப்பில் கடந்த வாரம் நடைபெற்றது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான மகுவா மொய்த்ரா தரப்பு விளக்கங்களை நீதிபதி அபிலாஷா குமாரி, அர்ச்சனா ராமசுந்தரம் மற்றும் மகேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது. இந்நிலையில் மகுவா மொய்தரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்கவும், விசாரணை முன்னேற்றத்தை ஒவ்வொரு மாதமும் அறிக்கையாக தாக்கல் செய்யவும் லோக்பால் உத்தரவிட்டுள்ளது.